“வித் லவ்’ என்னோட முதல் படம். ரசிகர்கள் முதல் படத்திலேயே இந்தளவுக்கு கொண்டாடுறது, பாராட்டுறது, ரசிக்கிறது எல்லாமே கடவுளோட ஆசீர்வாதம்தான் என்று நடிகை காவ்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
படம் ரிலீஸ் ஆனப்போ, தியேட்டர் விசிட் வந்தோம். என் பேரே மறக்குற அளவுக்கு ‘அனிஷா... அனிஷா...’ -னு ஆரவாரமா கத்தி, ரொம்பவே சிலிர்க்க வெச்சுட்டாங்க.
இப்போ, ஓடிடியில ரிலீஸ் ஆனபிறகு, அந்த புரப்போஸ் பன்ற காட்சியை பயங்கர வைரல் பண்ணி கொண்டாடுறது சந்தோஷமா இருக்கு!” என மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போய் பேசுகிறார், ‘வித் லவ்’ படத்தின் மற்றொரு நாயகி காவ்யா.
பள்ளி கால நட்பு, சேட்டைகள், சொல்ல மறந்த;மறைத்த காதல்கள் என மறந்துபோன பழைய நினைவுகளை எல்லாம் கீறிவிட்டிருக்கிறது, ‘அனிஷா’ வின் கேரக்டர். “இந்த நேரத்துல, ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நான் கடமை பட்டிருக்கேன். எல்லா கிரெடிட்டும் இயக்குநர் மதனுக்குத்தான்” என்கிற அனிஷாவிடம் சாரி, காவ்யாவிடம் படம் குறித்த பர்சனல் கேள்விகளை முன்வைக்க, அழகு புன்னகை, பளீர் சிரிப்பு என க்யூட்டாக பதில் அளிக்கிறார்.
”பள்ளி காலத்தில் சொல்லமுடியாத; சொல்ல தைரியம் இல்லாத, சொல்லத் தயங்கிய அந்த காதலை, நீங்கள் திருமணமாகி குழந்தைகள் பெற்றபிறகு வந்து, உங்கள் பள்ளி கால தோழன் அதே உணர்வுடன் இதயத்தை திறந்து வெளிப்படுத்துகிறான்” என இயக்குநர் உங்களுடைய காட்சியை விவரிக்கும்போது எப்படி இருந்தது அந்த ஃபீலிங்? ‘வித் லவ்’ வாய்ப்பு?”
“என்னுடைய பூர்வீகம் கேரளா. ஆனால், குடும்பத்தோடு பெங்களூரில் செட்டில் ஆகிட்டோம். அப்பா, பிரபல எம்.என்.சி. கம்பெனியில சீனியர் மேனேஜர். அம்மா டீச்சர். ப்ளே ஸ்கூல் நடத்திக்கிட்டிருந்தாங்க.
எனக்கு ஒரு தம்பி. நான், வீட்டுக்கு ஒரே சொல்லப் பொண்ணு. எங்கக் குடும்பத்துல சினிமா ஃபீல்டுல யாருக்கும் பெருசா இன்ட்ரஸ்ட் கிடையாது. ஆனா, எனக்கு சினிமா மேல ரொம்ப இன்ட்ரஸ்ட். அதனாலேயே, விஸ்காம் படிச்சேன்.
விளம்பரப் படங்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் புரடொக்ஷன் டீம்லேயும் ஒர்க் பண்ணியிருக்கேன். ‘மலர்கள் கேட்டேன்’ என்கிற குறும்படத்திலேயும் நடிச்சிருக்கேன். என்னோட போட்டோவை பார்த்துட்டு, இயக்குநர் மதன் ‘வித் லவ்’ படத்துக்கான ஆடிஷனுக்கு கூப்பிட்டார்.
புரப்போஸல் சீன்ல, எனக்கு என்ன வருமோ அதை ரொம்ப இயல்பா பண்ணி காண்பிச்சேன். வாவ்... சூப்பர்ன்னு சொல்லி, ரொம்பவே என்கரேஜ் பண்ணி, நீங்கதான் நான் தேடிக்கிட்டிருந்த அனிஷான்னு பாராட்டினார். ஸ்கிரிப்ட் படிச்சப்போ, ரொம்பவே புதுசாவும் இன்னும் எக்ஸைட்மெண்டையும் உருவாக்கிடுச்சு. அதனால, நானும் இன்வால்வ்மெண்ட் ஆகிட்டேன். அடுத்தது ஷூட்டிங்தான்!”
”ஒரு இஸ்லாமிய பெண் கேரக்டர்ல ரொம்ப அழகா, தத்ரூபமா, நடிச்சிருக்கீங்கன்னு பாராட்டுகள் குவியுதே? எப்படி அந்தக் காட்சியில் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக, எதார்த்தமாக நடித்தீர்கள்?”
“நான், பெங்களூர்லயே வளர்ந்த பொண்ணு. பெங்களூர் எல்லா மதத்தினரும் எல்லா மொழி பேசுபவர்களும் வாழுற ஒரு சரணாலயம் மாதிரி. புதுசா வர்றவங்கக்கூட, அப்படியே மிங்கிள் ஆகிடுவாங்க. எல்லா கலாச்சாரத்தையும் கனெக்ட் பண்ணிக்கிறது ரொம்பவே ஈஸி. எனக்கும் நிறைய முஸ்லீம் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்களோட பழகியிருக்கேன். அதனால, எனக்கு அது இயல்பாவே வந்துடுச்சு. அதுமட்டுமில்ல, இந்த படத்துல என்னோட சொந்தக்குரலில் தமிழ்லயே டப்பிங் பேசியிருக்கேன். அதுக்கு காரணமும், பெங்களூருதான்.
தமிழர்கள் நிறைய பேரு வசிக்கிறாங்க. அவங்களோடு ரொம்ப அன்பா, நட்பா இருக்கிறதால தமிழ் மொழியும் நெருக்கமான; பரிட்சயமான மொழியா ஆகிடுச்சு. என்னோட முதல் குறும்படத்திலேயே தமிழ்ல பேசிதான் நடிச்சேன். இப்படி சொந்தக் குரலில் பேசி நடிச்சதால, தமிழ்நாட்டு மக்களோட அதிகமா கனெக்ட் ஆகிட்டேன். அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்!”
”நாயகி அனஸ்வரா கேரக்டரையே ஓவர்டேக் செய்து உங்கக் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பேசப்பட்டுக்கிட்டிருக்கே?”
“இதெல்லாம் நான் எதிர்பார்க்காத விஷயம். அதேமாதிரி, என்னோட கேரக்டர்தான் பெருசா பேசப்படுதுன்னும் நினைக்கல. இயக்குநர் மதன், எல்லா கேரக்டருமே பேசப்படுற மாதிரிதான் உருவாக்கியிருந்தார். அதுதான், அவரோட ஸ்பெஷல். எல்லோருமே பாராட்டப்படுறதுல ரொம்பவே சந்தோஷம்.
இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணின முதல் காட்சியே, அந்த புரப்போஸல் காட்சிதான். எல்லாரையுமே ரொம்ப என்கரேஜ் பண்ணி நடிக்க வெச்சார் மதன். ஷூட்டிங் முடிஞ்சதும் எங்க சீன்லாம் எப்படி வந்திருக்குன்னு போய் பார்ப்போம். ஸ்கூல் காட்சியில, என்னோட முகத்துல முகப்பரு அதிகமா தெரிஞ்சது. அய்யய்யோ... பிம்பிள்ஸ் அதிகமா இருக்கேன்னு கொஞ்சம் பதட்டப்பட்டப்போ, ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இதுவே, ரொம்ப இயல்பா, அழகா இருக்கு’ன்னு பாசிட்டிவ்வா சொன்னார்.
நாம, மேக்கப் போடாம இப்படி இருக்கேன்னு யோசிச்சாக்கூட, அவர் ‘இது ரொம்ப இயல்பா இருக்கு. சூப்பரா இருக்கு. நல்லா வந்திருக்கு’ன்னு கான்ஃபிடெண்ட் கொடுத்தார். அவரைப் போலவே, படத்தின் ஹீரோ அபிஷனும் வெரி ஃப்ரெண்ட்லி டைப். ஜாலி, கேலின்னு எல்லாரையும் செம்மையா கலாய்ச்சுக்கிட்டே இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டே செம்ம ஃபன்னா இருக்கும். அனஸ்வரா மலையாளத்துல டாப் ஹீரோயின். ஆனா, செட்டுல ஜாலியா சில் பண்ணி வைப் பண்ணிக்கிட்டிருப்பாங்க.
ஸ்கூல் மெமரீஸ்னாலே எல்லாருக்குமே ஒரு குதூகலம் வந்துடும். எங்களுக்கு அதிலேயே திரும்பப்போயி வாழ்ற ஒரு வாய்ப்பு கிடைச்சது. அது எப்படிப்பட்ட ஃபீலை கொடுத்ததுங்கிறது, உணரும்போதுதான் தெரியும். ஒவ்வொருத்தருமே அந்த ஃபீலிங்க்ஸ்க்குள்ள போய்ட்டாங்க. அந்த புரப்போஸ் சீன்ல கண் கலங்கினது எல்லாமே க்ளிசரின் கிடையாது, ஒரிஜனல். உண்மையாகவே கண்கலங்கிட்டோம். அதனாலதான், ரொம்ப ரியலிஸ்ட்டிக்கா இருந்தது. அந்த காட்சியைப் பார்த்துட்டுத்தான், ரஜினி சாரும் லதா மேடமும் என்னை கூப்பிட்டு பாராட்டினாங்க. தேசிங் பெரியசாமி சார், மணிகண்டன் சார், கெளதம் ராஜ் சார், சசி சார் எல்லாருமே படம் பார்த்துட்டு பாராட்டினாங்க!”
”அந்த புரப்போஸ் காட்சி ரொம்பவே முற்போக்கானதா பேசப்பட்டதே?”
“கரெக்டான மீட்டர்ல எல்லோரும் ரசிக்கும்படியா அந்த காட்சியை இயக்குநர் மதன் எடுத்திருந்தார். ஒரு முற்போக்கான காட்சியில்; கேரக்டரில் நடிச்சதை நினைச்சு, நான் ரொம்ப பெருமைப்படுறேன்!”
”‘வித் லவ்’ மாதிரியே காதலை சொல்லாமல், மறைச்சுக்கிட்டு வாழ்ற இளைஞர்களுக்கு படத்துல அனிஷா அட்வைஸ் பண்ணியிருப்பாங்க. காவ்யா என்ன சொல்ல வர்றாங்க?”
”லவ் ஒரு க்யூட் ஃபீலிங். அனிஷா சொல்றதைதான் காவ்யாவும் சொல்றா. லவ் பண்ணிட்டு அதை மூடி மறைக்கக்கூடாது. நம்பளோட காதலை ஏற்றுக்கிறாங்களா இல்லையாங்கிறது முக்கியம் கிடையாது. என்ன ரிப்ளை வேணா வரட்டும். ஆனா, அதை சொல்லாம மறைக்கக்கூடாது. இந்த படமே அதைத்தானே சொல்ல வருது? அதேநேரத்துல, காதலை சொல்றேங்கிற பேர்ல ஹராஸ்மெண்ட்டுலயும், வன்முறையிலம் ஈடுபட்டுடக்கூடாது!”
”காவ்யாவோட நெக்ஸ்ட் படம்? ஃபேவரைட் நடிகர்கள்?”
“சசி சார் இயக்கத்துல விஜய் ஆண்டனி சார் நடிக்கும் ‘நூறுசாமி’ படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மே மாசம் ரிலீஸ். ‘வித் லவ்’ மாதிரியே இந்தப் படத்துக்கும் சப்போர்ட் கொடுப்பாங்கன்னு நம்புறேன். மற்றபடி, எனக்கு நடிகைகளில் மஞ்சு வாரியர், சமந்தாவை ரொம்பவே பிடிக்கும். நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஆனா, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ எப்பவுமே ஸ்பெஷல்!”