சினிமா

மாநாடு படம் வெற்றிபெற்ற நிலையில் வழக்கா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி

kaleelrahman

வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து வழங்கியிருக்கும் நேரத்தில் வழக்கா என மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. ஆனால், அந்தப் படத்தை வெளியிடுவதில் இறுதி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாததால், படத்திற்கு வாங்கிய கடனில் 5 கோடியை தயாரிப்பாளர் திருப்பி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த படம் வெளியீட்டுக்கு பிறகு தயாரிப்பாளர் கொடுக்காவிட்டால் நாங்கள் பொறுப்பு என சிலம்பரசனின் பெற்றோர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா ஆகியோர் கடிதம் வழங்கியிருந்தனர்.

ஆனால் படம் வெளியான முதல்நாள் காலை பத்து மணிக்கே அந்த கடிதத்தை பைனான்சியரிடம் திரும்பபெற்று அவர்களிடமே வழங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கூறுகிறார். மேலும் நிலுவையில் இருந்த கடனையும் அடைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனக்கு தெரியாமலேயே தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்துள்ளனர் என டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெற்றி கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த முழு விவரங்களையும் தங்களுடைய சங்கத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.