சினிமா

முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதிக்கு பதில் பிரிட்டிஷ் நடிகர்?- வெளியான தகவல்

newspt

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த 800 படத்திலிருந்து, நடிகர் விஜய்சேதுபதி விலகிய நிலையில், அவருக்குப் பதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த தேவ் பட்டேல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எந்தத்துறையில் சாதித்தாலும், அவர்களது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக மாற்ற இயக்குநர்கள் பலரும் விரும்புவர். அந்தவகையில், சமீபத்தில்கூட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற திரைப்படமாக உருவானது. அதேபோல், கணிதமேதை சகுந்தலா தேவி பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்தது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள், திரைப்படங்களாக வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பும் பெற்றது.

இதேபோல், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறும், திரைப்படமாக எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில், அவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்தத் தலைப்பில் அப்படம் உருவாக இருந்தது. இதில் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கயிருந்தார். இந்தப் படத்தின் முதல் போஸ்டர் வெளியானபோது, அச்சு அசல் முத்தையா முரளிதரன் போன்றே விஜய்சேதுபதி இருப்பதாக கூறப்பட்டது. இந்தப்படத்தை ஸ்ரீபதி இயக்குவதாக இருந்தது.

ஆனால் முத்தையா முரளிதரன், இலங்கை அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் ஆதரவாக பல்வேறு சூழ்நிலைகளில் கருத்து தெரிவித்துள்ளநிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் விஜய்சேதுபதியை தவிர, தனது பயோபிக் படத்திற்கு, யாரும் கதாநாயகனாக பொருந்த மாட்டார்கள் என்றுக்கூறிவிட்டு, முத்தையா முரளிதரனும் தனது பயோபிக் படத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதையடுத்து அந்தப் படத்தில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் மீண்டும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ‘800’ படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘ஹோட்டல் மும்பை’, ‘சாப்பி’ என பல படங்களில் நடித்துள்ள பிரிட்டன் நடிகர் தேவ் பட்டேல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து ‘800’ படக்குழுவோ, நடிகர் தேவ்பட்டேலோ தங்களது அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. தேவ் பட்டேல் தற்போது ‘மங்கிமேன்’ என்ற ஆங்கில படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.