அஜித்தின் ‘வலிமை’ படக்குழு ஸ்பெயின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கான படப்பிடிப்பின்போது அஜித், சிறிய பைக் விபத்தில் சிக்கினார். ஆனால், இது குறித்து வெளியே தகவல் கசியவே இல்லை. இந்த விபத்தில் அஜித்திற்கு அதிக காயம் ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அஜித்திற்கு அறிவுரை கூறியிருந்தனர்.
அதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் அஜித், துப்பாக்கிச் சுடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலாக மாறியது. அவர் தன் இரு காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு குறிவைத்து சுடுவது அந்தப் படங்களில் பதிவாகி இருந்தது. காதில் உள்ள ஹெட்ஃபோனில் நம் நாட்டின் தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது. அஜித், சாதாரணமான பச்சை நிற டி-ஷர்ட்டில் இருந்தார்.
அதனையடுத்து, அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் இடம்பெறும் ரேஸ் காட்சிகளை படமாக்கி வருகிறார். இதனிடையே ‘வலிமை’ குறித்து ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘100’ படத்தில் நடித்த ராஜ் ஐயப்பா அஜித்தின் படத்தில் இணைந்திருப்பதாக தெரிய வந்தது. இந்தப் படத்தில் இவர் அஜித்தின் தம்பியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் வினோத் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இருந்தார். ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து இதற்கான நடைபெற்றன. மொத்தம் 30 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. இயக்குநர் வினோத் ஏற்கெனவே எடுத்திருந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படப்பிடிப்பை ராஜஸ்தானில் நடத்தியிருந்தார். அதைப்போன்ற வறண்ட பிரதேசத்தில் ‘வலிமை’க்கான காட்சிகளை எடுக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இப்போது படக்குழு அஜித் தலைமையில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி எடுப்பது உறுதியானால் இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் அந்தப் பயணத்தை படக்குழு மேற்கொள்ளுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்தத் தகவல் குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.