சினிமா

ஆளுநரை பாண்டவர் அணியினர் சந்தித்தது ஏன்? நடிகர் விஷால் விளக்கம்

ஆளுநரை பாண்டவர் அணியினர் சந்தித்தது ஏன்? நடிகர் விஷால் விளக்கம்

Rasus

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளனர்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறது. இதற்கான பிரசாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகளைச் சந்தித்து ஆதரவும் திரட்டி வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இத்தேர்தலை நடத்துகிறார்.

இதனிடையே இந்தத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனப் பட்டினப்பாக்கம் காவல்துறை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேர்தலை நடத்த ஆட்சேபனையில்லை என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலை நியாயமான முறையில் போதிய பாதுகாப்புடன் நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நல்ல முடிவு வரும் என நம்புவதாக கூறினார். நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சங்கத் தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.