the kerala story web
சினிமா

‘The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது ஏன்? நடுவர்கள் விளக்கத்தால் வெடித்த சர்ச்சை!

The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.

PT WEB

71வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சில விருதுகள் கொண்டாடப்படும் அதே வேளையில் பல விருதுகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக The Kerala Story படத்திற்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டிருப்பதை கேரள முதல்வர் பினராய் விஜயன் உட்பட பலரும் விமர்சித்தும் கண்டித்தும் உள்ளனர்.

The Kerala Story - Kerala CM Pinaryi Vijayan

இந்த சூழலில் 71வது தேசிய விருதுகளில் நடுவராக இருந்த 11 நபர்களில் ஒருவரும், இயக்குநருமான பிரதீப் நாயர் விருதுகள் தேர்வு செய்யப்பட்ட காரணங்களாக நடுவர் குழு சொன்னவற்றை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஏன் ‘The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது?

முதலில் சுதீப்தோ இயக்கத்தில் உருவான The Kerala Story படத்திற்கு சிறந்த இயக்குநர் விருது அளிக்கப்பட்டது குறித்து கூறியிருந்த பிரதீப் நாயர், அந்தப் படம் தேர்வு செய்தற்கான காரணமாக, அப்படத்தின் சமூக கருத்து பிரதிபலிக்கிறது. மேலும் இந்தியாவின் முக்கிய சமூக பிரச்சனையை பேசுகிறது என நடுவர்கள் கூறினர். அதிகப்படியான ஓட்டும் அப்படத்திற்கே கிடைத்தது. இந்த நடுவர் குழுவில் இருந்த ஒரு மலையாளியாக இதனை எதிர்த்து, அது மோசமான கருத்தை பிரச்சாரம் செய்கிறது எனக் கூறியும் அதனை அவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை. மாறாக அவர்கள் என்னை தான் பிரச்சாரம் செய்பவர் என முத்திரை குத்தினர்.

மேலும் சிறந்த இயக்குநருக்கான நாமினேஷனில் உள்ளொழுக்கு படம் இயக்கிய கிறிஸ்டோ பெயரும் இருந்தது. ஆனால் உள்ளொழுக்கு வெறும் ஒரு ஃபேமிலி டிராமா எனவும் The Kerala Story சமூகத்துக்கு தேவையான படம் எனவும் சில நடுவர்கள் சொன்னதாக கூறுகிறார் பிரதீப் நாயர்.

The Kerala Story

ப்ளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்து வெளியான ஆடுஜீவிதம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. நஜீப் என்பவருடைய வாழ்வை பற்றி பென்யாமீன் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அதே பெயரில் சினிமாவாக மாற்றியிருந்தனர். அதில் பிருத்விராஜின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இப்படமும் தேசிய விருதில் பல்வேறு பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தைப் பார்த்த நடுவர்களில் ஒருவரான இயக்குநர் அஷுதோஷ் கோவேர்கர், அப்படத்தை சினிமாவாக தகவமைத்த விதத்திலும், அதன் உருவாக்கத்திலும் குறைகளை கூறினார். மேலும் அஷுதோஷ் கோவேர்கர் மற்றும் சில நடுவர்கள் ஆடுஜீவிதம் படம் இயல்பாக இல்லை எனவும் நடிப்பு உண்மையாக இல்லை எனவும் கூறியதாக சொல்லியிருக்கிறார் பிரதீப் நாயர்.

சிறந்த பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆகிய பிரிவுகளிலும் கூட ஆடுஜீவிதம் படத்தின் பெரியோனே ரகுமானே பாடல் இருந்தது, அதற்கும் விருது கொடுக்கப்படவில்லை. `உள்ளொழுக்கு' படம் சிறந்த இயக்குநர் விருதுடன், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் இருந்தது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. படத்தில் பல விஷயங்கள் பாராட்டப்பட்டதால் சிறந்த மலையாளப்படம் என்ற விருதை கொடுத்தனர்” எனக் கூறியுள்ளார் பிரதீப் நாயர்.

ப்ரித்விராஜ் Aadujeevitham

ஏற்கனவே தேசிய விருது குறித்து உருவாகியிருக்கும் அதிருப்தி, பிரதீப் நாயர் சொன்ன விஷயங்களால் மேலும் அதிகமாகி இருக்கிறது.