சினிமா

”யார் வெற்றி பெற்றாலும் நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்” - ஐசரி கணேஷ்

sharpana

”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ’வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும்’ என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். அதுதொடர்பான, விஷால் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசியும் யார் தலைவராக இருந்தாலும் தனது உதவிகள் தொடரும் என்றும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அந்த வீடியோவில்,

”தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தீர்ப்பு வெளியாகியுள்ளதை வரவேற்கிறேன். என்னைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் உடனடியாக நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிக்கவேண்டும். அதுதான் எனது முதல் வேண்டுகோள். அது நானாக இருந்தாலும் சரி. வேறு யாராக இருந்தாலும் சரி. முதலில் அதை செய்யவேண்டும். ஏனென்றால், அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படாமல் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் கட்டடத்தைப் பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கிறது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால்தான், நம்முடைய சங்க உறுப்பினர்கள், நாடக நடிகர்களின் கஷ்டங்கள் தீறும். என்னால் ஆன முடிந்த உதவியை இந்த கொரோனா சூழலிலும் மாதம் 450 உறுப்பினர்களுக்கு பென்ஷன் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதோடு, அவர்களின் பிள்ளைகளுக்கும் எனது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வியைக் கொடுக்கிறேன். இது எப்போதுமே தொடர்ந்து நடக்கும். நான் அல்ல, யார் வெற்றி பெற்றாலும் எனது உதவிகள் உறுப்பினர்களுக்கு என்றென்றும் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், இதை நான் இன்று நேற்று செய்யவில்லை. கிட்டத்தட்ட 15 வருடமாக செய்துகொண்டிருக்கிறேன். மறைந்த எனது தந்தை ஐசரி வேலன் இதில் உறுப்பினராக இருந்தார். அவருடைய நினைவாகத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து‘மேல் முறையீடு செல்கிறீர்களா?’ என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் நடிகர் சங்க விஷயமா எந்தக் கோர்ட்டுக்கும் நான் சென்றதில்லை. மேல் முறையீடு யார் சென்றது என்று அனைவருக்கும் தெரியும். அப்படி செல்லாமல் இருந்திருந்தால் இந்த இரண்டரை வருடத்தில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். எல்லா நடிகர் சங்க உறுப்பினர்களின் கஷ்டங்களும் நீங்கியிருக்கும்” என்று உருக்கமுடன் வீடியோ வெளியிட்டு உதவிகள் தொடரும் என்பதையும் அறிவித்திருக்கிறார் ஐசரி கணேஷ்.