மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதையடுத்து தெலுங்குக்கு சென்ற அவர், ’ஃபிடா’, ’மிடில் கிளாஸ் அப்பாயி’ படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘கரு’ படத்திலும் நடித்துள்ளார். அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், தனுஷின் ’மாரி-2’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சாய் பல்லவி மீது ’கரு’ படத்தில் நடித்துள்ள இளம் தெலுங்கு ஹீரோ நாக சவுரியா பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்தார். “படப்பிடிப்பில் சாய் பல்லவியின் நடவடிக்கைகள் சரியாக இல்லை. முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சிறுசிறு விஷயங்களுக்கு கோபப்பட்டார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த ஃபிடா படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணம் இல்லை” என்று கூறியிருந்தார் அவர்.
இந்த புகார், பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நானியுடன், சாய் பல்லவி நடித்த ’மிடில் கிளாஸ் அப்பாயி’ படப்பிடிப்பிலும் இதுபோல் பிரச்னை ஏற்பட்டது. படப்பிடிப்பில் நானியும் சாய் பல்லவியும் தகராறில் ஈடுபட்டு இருவருமே படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார்கள்.
இந்நிலையில் ஆந்திர மாநில கல்வித் துறை அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மகன், கண்டா ரவிதேஜாவை சாய் பல்லவி காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் செய்தி வெளியானது. கண்டா ரவிதேஜா, ’ஜெயதேவ்’ என்ற ஒரே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த திருமணச் செய்தி பரபரப்பான நிலையில் அதை அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் நேற்று மறுத்தார். அவர் கூறும்போது, ‘எனது மகனும் சாய் பல்லவியும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. பிறகு எப்படி இப்படியொரு செய்தி வெளியானது என்று தெரியவில்லை. மீடியா, செய்திகளை உறுதிப்படுத்திவிட்டு வெளியிட வேண்டும். சாய் பல்லவியின் இமேஜ் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மறுப்பை நான் வெளியிடுகிறேன்’ என்றார்.
(கண்டா ரவிதேஜா)
இந்த வதந்திகளால் சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதுபற்றி அவர் தரப்பில் விசரித்தபோது, ‘சாய் பல்லவி நடிக்க வந்ததில் இருந்தே அவர் மீது தேவையில்லாத வதந்திகள் பரபரப்பட்டு வருகிறது. திட்டமிட்டே யாரோ சிலர் இப்படி செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கப் போவது என்ன என்பது தெரியவில்லை’ என்றனர்.
இதற்கிடையே, அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் சாய் பல்லவி தரப்பில் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.