சினிமா

ரஜினிக்கு நெருக்கமான இந்த ராஜூ மகாலிங்கம் யார்?

ரஜினிக்கு நெருக்கமான இந்த ராஜூ மகாலிங்கம் யார்?

webteam

ரஜினிகாந்த தன்னுடைய அரசியல் பயண அறிவிப்புக்கு பின்னர் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்ற மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, அவர்கள் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது என்று வேலைகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கத்தை ரஜினிகாந்த் நியமித்துள்ளார். 

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்காவில் செயல் தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கத்தை தன்னுடைய மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 31ம் தேதி 1974-ல் பிறந்த ராஜூ மகாலிங்கத்தின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை.

வணிகம் படித்திருக்கும் ராஜூ மகாலிங்கம் லைக்கா நிறுவனத்தில் மிக முக்கிய நபராக திகழ்ந்தவர். இவருடைய முடிவின் கீழ்தான் தமிழ் திரையுலகில் காலூன்றியது லைக்கா நிறுவனம். ஒரு விஷயத்தை சரியான முறையில் திட்டமிடுதல், அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டுதல் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவராக இருந்துள்ளார் ராஜூ மகாலிங்கம்.
 
இவரின் ஆலோசனைப்படிதான் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.o படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முடிவெடுத்தது. இதன் மூலம் ரஜினிகாந்தை சந்தித்த ராஜூ மகாலிங்கம்,தொழிலை தாண்டி ரஜினிகாந்துடன் நல்ல நட்பை வளர்த்துள்ளார். அதோடு சிறுவயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவும் இருந்திருக்கிறார். இதனால் ரஜினிகாந்தின் நம்பிக்கைக்குறிய நபராகவும் மாறியுள்ளார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட இருப்பதால், லைக்கா நிறுவனத்தில் செயல் அதிகாரியாக (CEO) இருந்த ராஜூ மகாலிங்கம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியுடன் இணைந்தார்.

ராஜூ மகாலிங்கத்தின் திறமையும் திட்டமிடலையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ரஜினி, தன்னுடைய மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யும் பொறுப்பை சுதாகர் மற்றும் ராஜூ மகாலிங்கம் ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.


வேலூர், நெல்லை, தூத்துக்குடி என ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளின் நியமனத்திலும் ராஜூ மகாலிங்கத்தின் பங்களிப்பும் அதிகம் இருந்துள்ளது. அதேபோல் மாவட்ட நிர்வாக பொறுப்பிற்கு விருப்பம் தெரிவிப்போரிடம் சில கேள்விகளை முன்வைத்து அவர்கள் கூறும் பதில் திருப்தியாக இருந்தால் மட்டுமே பதவி கொடுப்பது என்று திட்டமிட்டுள்ளார் ராஜூ மகாலிங்கம். அதேபோல் நிர்வாக பொறுப்பில் சீனியர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் சரி சமமாக இருக்கவேண்டும். இளைஞர்களை அதிகளவில் மக்கள் மன்றத்தில் இணைக்க வேண்டும் என்பதும் அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதும் அவருடைய கணக்கு.

ஒவ்வொரு விஷயத்திலும் திறம்பட செயல்பட்டு வருவதால் ராஜூ மகாலிங்கத்திற்கு உடனடியாக மாநில பொறுப்பு கொடுப்பது என்று முடிவெடுத்த ரஜினிகாந்த், அவரை மாநில செயலாளர் பதவியில் நியமித்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சியில் முக்கிய தலைவராக ராஜூ மகாலிங்கம் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் அனைத்து மாவட்டத்திற்குமான நிர்வாகிகளை விரைவில் நியமித்து கட்சி தொடங்குவதற்கான வேலைகளை தீவிரப்படுத்த சுதாகர், ராஜூ மகாலிங்கம் தலைமையிலான அணியினருக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.