சினிமா

தெலுங்கில் தனுஷ் உடன் இணையும் சேகர் கம்முலா... யார் இந்த 'புரட்சிகர' இயக்குநர்?

நிவேதா ஜெகராஜா

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத இந்த இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்தது ஏன் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது என்பது தொடர்பாக சற்றே விரிவாக பார்ப்போம்.

தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ஆனால், தனுஷ் குறித்து இன்று வெளியான ஓர் அறிவிப்பு 'ஜகமே தந்திரம்' படம் ரிலீஸ் குறித்த பேச்சுகளைத் தாண்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அறிவிப்பு, அவரின் அடுத்த படம் தொடர்பானது. வழக்கமாக தனுஷ் பட அறிவிப்பு வந்தால் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், இன்று வெளியாகியுள்ள அறிவிப்பால் தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடட்டத்தில் உள்ளனர். ஏனென்றால், தனுஷை வைத்து படம் இயக்க இருப்பது, தெலுங்கின் முன்னணி இயக்குநரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கம்முலா என்பவர்தான்.

தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இது அவரை தெலுங்கு சினிமாவின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவராக ஆக்கியது. கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான 'டாலர் ட்ரீம்ஸ்' படம் இவரின் முதல் படம். முதல் படத்திலேயே, சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை சேகர் கம்முலா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இரண்டாவது படம் 'ஆனந்த்'. 2004ல் வெளியான இந்தப் படமும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியால் 2004-ல் துவண்டு கிடந்த தெலுங்கு சினிமாவுக்கு நம்பிக்கை கொடுத்தார் சேகர். இதனால் தெலுங்கு திரையுலகின் முக்கிய நபரான டாக்டர் தசரி நாராயண ராவ், இயக்குநர் சேகர் கம்முலாவை "2004 இன் ஹீரோ" என்று அறிவித்தது அப்போது பேசுபொருளானது.

அவரது அடுத்த படம் 'கோதாவரி' விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. ஆனால், 2007-ல் வெளியான `ஹேப்பி டேஸ்' தெலுங்கை தாண்டி சேகர் கம்முலாவை பரிச்சயப்படுத்தியது. இப்படம் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் தமிழில் 'இனிது இனிது' என்று ரீமேக் ஆனது. பாலிவுட்டில் சேகரே இதை ரீமேக் செய்தார். இவரின் படங்கள் தெலுங்கு தேசங்களில் நல்ல வரவேற்பை பெற பல காரணங்கள் உண்டு. மற்ற இயக்குநர்களில் இருந்து தன்னை தனித்துவமாக காட்டிக்கொள்பவர் சேகர். இவரது படங்களில் மற்ற தெலுங்கு படங்களில் இருக்கும் வன்முறைகள் இருக்காது.

வழக்கமாக தெலுங்கு சினிமாவில் தூவப்படும் மசாலா காட்சிகள், அதிக நாடகத்தன்மை கொண்ட காட்சிகள் இருக்காது. பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் ஃபீல் குட் வகைகளாக இருந்தாலும், தனது திரைப்படங்களில் யதார்த்தத்தை முன்வைக்கும் திறமை கொண்டவர். கதைக்கு தேவையானது மட்டுமே இவரின் காட்சி அமைப்புகளில் இருக்கும். தேவையில்லாமல் பாரீன் சாங், 100 பேர் கொண்ட சண்டைக் காட்சி என தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான எந்த அம்சமும் இவரின் கதையில் எதிர்பார்க்க முடியாது. இதைவிட தனது ஒவ்வொரு படத்திலும் பெண்களை மையமாக கொண்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும். அதற்கு அவரின் கடைசி படமான `பிதா'வே உதாரணம். இதனால் சேகரின் படங்களுக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதுவே ஓவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீஸில் இணைய வைக்கிறது.

திரைத்துறையில் இத்தனை சாதனைகளை செய்தாலும், இவர் சினிமா பயின்றது முறையாக இல்லை. இவர் படித்ததற்கும், சினிமாவுக்கு சம்பந்தம் இல்லை. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, நியூ ஜெர்சியில் கணினி அறிவியலில் பட்டப்படிப்பு பட்டம் பெற்று, ஐடி பணியாளராக அமெரிக்காவில் வேலை பார்த்து, பின்னர் வாஷிங்டன், டி.சி., ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஃப்.ஏ முடித்த சேகர் சினிமா மீது கொண்ட காதலால் தனது அனைத்து பணிகளையும் விட்டு தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தற்போது சேகர் கம்முலா தனது படங்களுக்காக இதுவரை 5 முறை சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் 4 முறை நந்தி விருதுகளையும் குவித்துள்ளார்.

திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களால் லாபம் ஈட்டுவதற்காக அல்லது ஒரு வலுவான செய்தியை அல்லது கருத்தை மக்களுக்கு சொல்வதற்காக உருவாக்கப்படுகின்றன. சேகர் கம்முலா தனது படங்களை தயாரிக்கும்போது இதில் இரண்டாவது காரணத்தை பின்பற்றுகிறார். சிறந்த வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களைப் பற்றி பேசிய 'டாலர் ட்ரீம்ஸ்' படம் மூலம் அவர் அறிமுகமானதிலிருந்து, சமீபத்திய 'ஃபிதா' வரை, அவரது எல்லா திரைப்படங்களும் ஒரு கருத்தை கொண்டு அதேநேரம் ஃபீல் குட் மூவிகளாக அமைந்துள்ளன.

தெலுங்கின் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை சேகருடன் இணைய காத்திருக்கும் வேளையில் தான் தனுஷை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, இந்தியாவின் பன்முகம் கொண்ட நடிகராக மாறிக்கொண்டு வரும் தனுஷும், தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரும் இணையப்போவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களைத் தாண்டி தமிழ் ரசிகர்களிடம் நிச்சயம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

- மலையரசு