சினிமா

கோல்டன் குளோப் விருது: யார் இந்த கீரவாணி - தமிழில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்துள்ளாரா?

சங்கீதா

திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுதான் விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association வழங்கும் இந்த விருது வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவிலும், அந்தப் படத்தின் மிகவும் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்தப் பாடல் பிரிவிலும் நாமினேஷனுக்கு தேர்வாகியிருந்தநிலையில், ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம். கீரவாணி இசையமைத்திருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்றது.

விருது அறிவிக்கப்பட்ட உடனே விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட வீடியோவும் வெளியாகி வைரலாகின. இந்தப் பாடலை ராகுல், கால பைரவா பாடியிருந்தனர். சந்திரபோஸ் எழுதியிருந்த பாடல் வரிகளுக்கு, பிரேம் ரக்ஷித் சிறப்பான நடனம் அமைத்திருந்தார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடனமாடியிருந்தனர். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலக மாளிகை முன்பு இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோல்டன் குளோப் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி குறித்து இங்குப் பார்க்கலாம்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கொவ்வூரில் 1961-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எம். கீரவாணி. தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கியது மட்டுமின்றி, பாடலாசிரியராகவும், சிலப் பாடல்களுக்கு பின்னணியும் பாடியுள்ளார் எம்.எம். கீரவாணி. 80 காலக்கட்டங்களில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், தெலுங்கு மட்டுமில்லாது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சுமார் 150 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தாலும், தனது உறவினரும், இயக்குநருமான எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்கள்தான் அவரை உலகளவில் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.

நாகர்ஜூனாவின் ‘அன்னமாயா’ திரைப்படம் இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றுக் கொடுத்தது. மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அழகன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான எம்.எம். கீரவாணி, தொடர்ந்து ‘நீ பாதி நான் பாதி’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்திலும் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘அழகன்’ படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும் அவர் பெற்றுள்ளார்.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மனைவி ரமா ராஜமௌலியின் சகோதரியும், தயாரிப்பாளருமான ஸ்ரீவள்ளி என்பவரைத்தான் எம்.எம்.கீரவாணி திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 61 வயதான எம்.எம்.கீரவாணிக்கு கால பைரவா என்ற மகன் உள்ளார். பிரபல பாடகரான இவர்தான் ராகுலுடன் இணைந்து, ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.