சினிமா

’லியோ’ ப்ரோமோ பாடல் எழுதிய Heisenberg யாரு? ஒருவேளை இவரா இருக்குமோ? வைரலாகும் ட்வீட்!

JananiGovindhan

விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர்.

படத்தின் அடுத்தகட்ட படபிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. தளபதி 67 என அழைக்கப்பட்டு வந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியோடு ப்ரோமோவே வெளியாகி இருக்கிறது. அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு ப்ரோமோ வெளியிட்டதை போலவே இந்த படத்துக்கான ப்ரோமோவுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

லியோ படத்தின் ப்ரோமோ, டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் ப்ரோமோவில் இடம்பெற்ற பாடலை எழுதியவர் யார் என்ற கேள்வியே விஜய் ரசிகர்களை துரத்தி வருகிறது. ஆங்கில பாடலுக்கான அந்த வரிகளை ஐசென்பெர்க் எழுதியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஐசென்பெர்க் யார் என்பதே பெருவாரியான ரசிகர்களின் பிரதான கேள்வியே.

இதனை டீகோட் செய்யும் வகையில் விஜய் ரசிகர்கள் இறங்கியிருக்கிறார்கள். அதன்படி, விக்ரம் படத்தில் wasted மற்றும் once apon a time ஆகிய ஆங்கில பாடல்களை எழுதியதும் இதே heisenbergதான். அந்த பாடல்களின் வரிகள் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போன நிலையில் தற்போது லியோ படத்தின் Bloody sweet ப்ரோமோ பாடலும் ரொம்பவே ஈர்த்திருக்கிறது.

ஆகையால் அந்த ஐசென்பெர்க் நிச்சயம் இசையமைப்பாளரான அனிருத்தாகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அந்த ஐசென்பெர்க் அனிருத்தின் இசைக்குழுவில் வெகு நாட்களாக பணியாற்றி வருபவர் என்றும், அவர் அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்றும் சொல்லப்படுகிறது.

அதேவேளையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜே அந்த ஐசென்பெர்க்காக இருக்குமோ அல்லது லோகேஷின் உதவி இயக்குநர்களில் ஒருவர்தான் இந்த ஐசென்பெர்க்கா என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் அனிருத்தான் ஐசென்பெர்க்காக இருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

முன்னதாக தளபதி 67 படமான லியோ லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில் வருமா வராதா என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், படத்தின் ப்ரோமோ வெளியானதும் இந்த ஐசென்பெர்க் யார் என தெரிந்துக்கொள்ளவே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள் என்பது #Heisenberg என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருப்பதின் மூலமே அறிய முடிகிறது.