நடிகர் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து விலங்குகள் நல வாரியம் இன்று சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ' மெர்சல்'. இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். தீபாவளி நாளில் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சென்சார் போர்டு சான்று அளித்துவிட்டதாக இயக்குநர் அட்லி சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார். ஆனால், படத்தில் புறா, பாம்பு உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களிடம் சான்று இன்னும் பெறவில்லை என்று விலங்கு நல வாரியம் தெரிவித்துவிட்டது. இதனையடுத்து சென்சார் போர்டு சான்று அளிக்கப்பட்டதா என விளக்கம் அளிக்குமாறு விலங்கு நல வாரியம் தரப்பில் சென்சார் போர்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சென்சார் போர்டு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்று அந்த வாரியத்தின் தரப்பில் கூறியதாக தகவல் வெளியானது.
இதனிடையே, மெர்சல் படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது. எனவே முதலமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். அவருடன் மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்சி ஆனந்த் ஆகியோரும் உடனிருந்தனர். ஆலோசனை முடிந்து வெளியேறியபோது விஜய் தரப்பில் யாரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. எனினும், மெர்சல் திரைப்படத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சருடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து விலங்குகள் நல வாரியம் இன்று சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. ஆகையால் தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸாகுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.