மக்களவைத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. பாஜக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது. முன்னணி நிலவரங்களைக் கேட்க ஏராளமானோர் சேனல் மற்றும் இணையதளங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகளை பல்வேறு சேனல்கள் நேரடியாக ஒளிப்பரப்பி கொண்டிருந்தன. அப்போது ரிபப்ளிக் சேனல் தலைமை ஆசிரியரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி லியோன், முன்னிலையில் இருக்கிறார் என்று சொன்னார்.
பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டார் என்று. ஒரு முறை என்றால் கூட பரவாயில்லை. தொடர் ந்து சிலமுறை நடிகை சன்னி லியோன் பெயரை, சொன்னார் அர்னாப். பிறகுதான் தெரிந்தது அவர் குறிப்பிட்டது, அந்த தொகுதியில் போட்டியிட்ட பிரபல இந்தி நடிகர், சன்னி தியோலை என்று!
இதோடு முடிந்திருந்தால் பிரச்னையில்லை. விவாதத்தைக் கேட்டுக்கொண்டிருந்த நடிகை சன்னி லியோன், ‘’நான் எத்தனை வாக்கு வித்தி யாசத்தில் முன்னிலையில் இருக்கிறேன்?’’என்று ட்விட்டரில் கிண்டலாகப் பதிவிட்டார்.
போதாதா? பற்றிக்கொண்டது ட்வீட் உலகம்! இதுதான் நேரம் என்று அர்னாப்பை வைத்து செய்து விட்டார்கள். அர்னாப்பின் இந்த ’டங் ஸ்லிப்’ இணையதளத்தில் நேற்று முதல் வைரலாகி வருகிறது.