சினிமா

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது ? இன்று விசாரணை

webteam

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர், விஷால், கார்த்தி தலைமையில் பாண்டவர் அணியினரும், பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர் தேர்தலை நிறு‌த்துமாறு, சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்ததோடு, வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்தது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திரைபிரலங்கள் பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை எப்போது என தெரியவரும். 

இதனிடையே, தபால் வாக்குகள் வந்து சேராத நிலையில், நேரில் வாக்களிக்க வந்த தங்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி, சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக் கோரும் அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.