திருமுருகன் காந்தியின் 100 நாள் சிறை வாசத்திற்கு என்ன நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு பிறகு மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த தடை வித்திருந்தது தமிழக காவல்துறை. அந்தத் தடையை மீறி திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கத்தின் சார்பில் கடந்த 21ம் தேதி இலங்கைப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து பின் மாலை விடுவித்துவிட்டனர். கைதானவர்களில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது மட்டும் பொது சொத்தை சேதப்படுத்தியதாக கூறி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் போலீஸார்.
அதையொட்டி திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த கோவை ஜெகன், சென்னை எம்ஆர்சி நகர் டைசன், தாம்பரம் அருண்குமார் இந்த 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். அதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குண்டர் சட்டத்தை தவறாக பிரயோகம் செய்தவர்கள் இந்த 100 நாட்களுக்கு மேலான சிறை அவஸ்தைக்கு என்ன நஷ்ட ஈடு தரப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.