சினிமா

கமலின் விக்ரம் டீஸர் சொல்வது என்ன? திரையும்... நிஜ அரசியலும்! 

EllusamyKarthik

கோலிவுட் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜோடு கூட்டணி  சேர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டிலும், டீஸரும் வெளியாகியுள்ளது. 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீஸர் சொல்ல வருவது என்ன?

வேட்டைக்கு வெறிகொண்டு விடியலை எதிர்பார்த்து காத்து நிற்கும் வேங்கையை போல யாரையோ எதிர்பார்த்து நிற்கிறார் கமல். அடுத்த ஷாட்டில் குக்கர் விசில் அடிக்க வரவிருப்பவர்களுக்கு படையல் போடுகிறார். 

தொடர்ந்து துப்பாக்கியில் தோட்டாக்களை லோட் செய்து சில இடங்களில் மறைத்து வைக்கிறார். கூடவே போர் வாளையும் சுழட்டி மறைத்து வைக்கிறார்.

சட்டம், காவல், அரசியல் ஆளுமைகள் முகமூடி அணிந்தபடி படையாக வர கமலும் அவர்களோடு விருந்தில் அமர்ந்து கொண்டு ‘ஆரம்பிக்கலாங்களா’ என கேட்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விருந்தாளிகளை கோடாரியால் தாக்குகிறார். 

அதில் கறை படிந்த கரங்களை விரட்டியடிக்கும் சாத்தானாக கமல் காட்சியளிக்கிறார்.

டீஸர் சொல்வதும் கமலின் நிஜ அரசியலும்

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக உள்ளார். கமல் தன்னுடைய கட்சியை ஆரம்பித்த போது ஊழல் என்பதை முக்கியமான பிரச்னையாக கூறியிருந்தார். தூய்மையான அரசியல் வாதியாக, நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறி வந்தார். 

ஊழலை எதிர்த்து நிஜ அரசியலில் குரல் கொடுத்து வரும் கமலின் ரியல் லைஃப்புக்குள்ளும் இந்த டீஸர் இசைந்து போவது தான் சர்ப்ரைஸாக உள்ளது. அவரது இந்தியன் படமும் கறைபடிந்த ஊழல் வாதிகளை வதம் செய்வதாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.