சிறந்த திரைக்கதை, கதாபாத்திர தேர்வு, கதைக்களம் என இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத ஒரு பக்கத்தை ’வடசென்னை’ படத்தின் மூலம் எடுத்துவந்தார் இயக்குநர் வெற்றிமாறன். இப்படம் எழுத்து, இயக்கம், நடிப்பு மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
’வடசென்னை 2’ எப்போது வரும் என செல்லும் இடமெல்லாம் தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் கேட்கும் அளவு, அப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில், வடசென்னை திரைப்படத்தை மையாக கொண்டு மற்றோரு கேங்ஸ்டர் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும், அப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இக்கூட்டணிக்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, சிம்புவை வைத்து படம் இயக்கவிருப்பதால் தனுஷ்க்கும் வெற்றிமாறனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், வடசென்னை படத்தை மையாக கொண்ட திரைப்படத்திற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்ததோடு, NOC வழங்க 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த சூழலில் உண்மையில் என்ன நடந்தது சிம்புவை வைத்து படம் இயக்கப்போகிறேனா?, வடசென்னை படத்தை ஓட்டிய மற்றொரு படமா?, சிம்பு படத்தால் தனுஷ் உடன் பிரச்னையா? உண்மயில் தனுஷ் 20 கோடி காப்புரிமைக்கு கேட்டாரா? என்ற பல்வேறு குழப்பங்களுக்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் வெற்றிமாறன்.
வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கும் வெற்றிமாறன், சிம்பு உடனான கூட்டணியை உறுதிசெய்தார்.
சிம்பு உடனான கூட்டணி குறித்து பேசிய வெற்றிமாறன், “அடுத்த படத்தில் தாணு சார் தயாரிப்பில், சிம்பு நடிக்கப்போறார். என்னுடைய அடுத்த படம் என்ன என்பதற்கான பதில் இதுதான். வாடிவாசல் திரைப்படம் முழுமையாக இன்னும் எழுதி முடிக்காததாலும், டெக்னிக்கல் பிரச்னை மற்றும் படத்தில் நடிக்க்கும் நடிகர்கள் பாதுகாப்பு, விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும் தள்ளிப்போய் உள்ளது.
அதற்குள் இன்னொரு படம் முடித்துவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன், அப்போது தான் தாணு சார் சிம்புகிட்ட பேசுறிங்களானு பேச வச்சார். 3 பேரும் பேசினோம், உடனே படம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம்” என்று பேசியுள்ளார்.
சிம்பு உடனான புதிய படம் வடசென்னை கதைக்களத்தை மையப்படுத்தியதா, வடசென்னை படத்துடன் கனக்ட் ஆகுமா என்பது பேசியிருக்கும் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
வடசென்னை உலகத்தில் ஒரு பகுதியாக உருவாகவிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், “சிம்பு உடனான புதிய படம்தான் வடசென்னை இரண்டாம் பாகமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கு. இது வடசென்னை 2 கிடையாது, அது அன்புவின் எழுச்சி தான், அதில் தனுஷ் தான் நடிப்பார். அதேநேரத்தில் சிம்பு உடன் செய்யவிருக்கும் புதிய படம் வடசென்னை உலகத்தில் ஒரு பகுதியாகவே இருக்கும். வடசென்னை படத்தில் இருக்கும் சில கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் இந்த படத்திலும் இருக்கும். அதே டைம்லைன்ல தான் இந்தப்படமும் இருக்கபோகுது” என்று தெரிவித்தார்.
தனுஷ் பணம் கேட்டாரா என்பது குறித்து பேசிய அவர், “வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தான், அந்தப்படத்தை மையமாக கொண்டு வேறொரு திரைப்படமோ, இல்லை ஒரு காட்சியை பயன்படுத்துவதோ, இல்லை காமிகஸ் உருவாக்குவது என்றால் கூட தனுஷ் அனுமதி வழங்க வேண்டும். அதற்கு அவர் பணம் கேட்டால் கூட அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு படம் பண்ணபோறோம், நீங்க சம்மதித்தால் வடசென்னை படத்தை ஒட்டி எடுப்பேன், இல்லை தனியாக இயக்கவேண்டுமானாலும் என்னால் தனிபடமாக இதை இயக்க முடியும் என்று கூறினேன்.
அதற்கு தனுஷ் ஒரு பிரச்னையும் இல்ல சார் நீங்க வடசென்னை படத்தை மையமா வச்சு படம் பண்ணனும்னு நினைச்சிங்கனா பண்ணுங்க, உங்களுக்கு எது சரியா இருக்கோ அத பண்ணுங்க. நான் இங்க இருக்க டீம் கிட்ட பேசிடுறன், எங்க சைடுல இருந்து உடனே NOC கொடுத்துடுறன் சார், அதற்கு பணம் செலுத்த தேவையில்லைனு சொன்னார். ஆனால் தனுஷ் குறித்து சில யூடியூப் வீடியோ, தம்ப் லைன் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு உடன் படம் செய்வது குறித்து தனுஷ் என்ன சொன்னார் என்பதை விளக்கியிருக்கும் வெற்றிமாறன், “தனுஷ் கிட்ட சிம்புவோட படம் பண்ணபோறன்னு சொன்னப்போ, இந்தபடம் உங்களுக்கு புது அனுபவமா இருக்கும் சார், சிம்புவுக்குமே உங்களோட படம் பண்ணுவது புதிய அனுபவத்தை தரும் என்று சொன்னார்.
அதேநேரத்தில் சிம்பு சில நாட்களுக்கு பிறகு வந்து, சார் உங்களுக்கும் தனுஷுக்கும் அக்ரீமெண்ட்ல பிரச்னைனு செய்தி எல்லாம் பார்த்தேன். உங்களுக்கு வட சென்னை உலகத்துல இந்த படம் செய்தாலும் சரி, இல்ல தனிப்படமா பண்ணனும்னு நினைச்சாலும் சரி எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. உங்களுக்கும் தனுஷ்க்கும் எந்த பிரச்னையும் வரகூடாது என்று சொன்னார். இரண்டு பேருக்கும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருக்காங்க” என்று வெற்றிமாறன் கூறினார்.
தனுஷ் உடனான உறவு குறித்து பேசிய வெற்றிமாறன், “என்ன பத்தியோ, தனுஷ் பத்தியோ அல்லது இந்த படத்த பத்தியோ தவறா பேசுறது எனக்கு பிடிக்கவில்லை. தனுஷ்க்கும் எனக்குமான உறவில் ஒரு படத்தாலோ, ஒரு நிகழ்வாலோ விரிசல் ஏற்பட்டுவிடாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
சமீபத்தில் ஏற்பட்ட பணப்பிரச்னையின் போது கூட தனுஷ் தான் எனக்கு உதவிசெய்தார். அவரால் எனக்கு எப்போதும் எந்த பிரச்னையும் இருந்தது கிடையாது. நான் உதவி இயக்குநராக இருந்தபோதும் சரி, அடுத்து செய்த படங்களின்போதும் சரி தனுஷ் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்” என்று பேசியுள்ளார்.