மத்திய அரசின் கட்டுப்பாடு, கண்காணிப்பின் கீழ் இனி வருவதால், ஓ.டி.டி தளங்களில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு பெரும் பின்னடைவு எனக் கருதப்படுகிறது. அதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
ஆன்லைன் கன்டென்ட் புரொவைடர்களால் வழங்கப்படும் சினிமா, ஆடியோ - வீடியோ நிகழ்ச்சிகள் மற்றும் இணையதளங்களில் வெளிவரும் செய்திகள், நாட்டு நடப்பு சார்ந்த உள்ளடக்கங்கள் ஆகியவை இனி மத்திய அரசின் கட்டுக்குப்பாட்டுக்குக் கீழ் வருகின்றன.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால், இந்தியாவில் டிஜிட்டல் / ஆன்லைன் மீடியாவைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வகை செய்யும் நடைமுறைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, அது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அணுகுமுறை என்பது ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் - ஆன்லைன் மீடியாவைக் கொண்டது என்றாலும், ஓ.டி.டி தளங்களுக்கே முதலில் 'கவனத்தில்' கொள்ளப்படுவது தெளிவு.
ஓவர் தி டாப் எனப்படும் ஓ.டி.டி (OTT - Over-the-top) தளங்களைப் பொறுத்தவரையில் தற்போது திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், வெப் சீரிஸ் முதலானவற்றை உள்ளடக்கியவை.
இந்தியாவில் ஏற்கெனவே வெளியான படங்களில் இந்தத் தளத்தில் ரிலீஸ் செய்யப்படும்போது, ஏற்கெனவே மத்திய அரசின் அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்கும் என்பதால், அவற்றுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இனி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸார் போன்ற ஓ.டி.டி தளங்களில் நேரடியாக படங்களை ரிலீஸ் செய்யப்படும்போது, இனி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அமைப்பு மூலம் அனுமதி பெறவேண்டியது வரக்கூடும் என்பதே முக்கியப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இது, ஒரிஜினல் வெப் சீரிஸ், குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் டாக் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.
அச்சு, தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ரேடியோ ஆகிய ஊடங்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கண்காணித்துக் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் உள்ளன. ஆனால், இதுவரை இந்தியாவில் ஓ.டி.டி தளங்களுக்கென தனியாக அரசின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பு முறைப்படுத்துவது நடைமுறையில் இல்லை. இதனால், கட்டற்ற சுதந்திரத்தை ஓ.டி.டி தளங்களும், அவற்றுக்கான படைப்புகளை உருவாக்குவோரும் அனுபவித்து வந்தன. அது இனி தடைபடும்.
அதாவது, தங்களுடைய கன்டென்ட்டுகளுக்கு இனி முன் அனுமதியும் சான்றிதழும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் பெறவேண்டிய நிலை ஏற்படும். இந்த நடைமுறையே ஓ.டி.டி தளங்களுக்குப் பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.
குறிப்பாக, அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கொண்ட படைப்புகளைத் தயாரித்து வழங்குவதில் பிரச்னைகள் ஏற்படலாம்.
அதேவேளையில், ஓ.டி.டி தளங்களின் உள்ளடக்கம் தொடர்பான நெறிமுறைகளும் விதிமுறைகளும் மத்திய அரசு விரைவாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், ஓ.டி.டி தளங்களுக்கும், அவற்றில் வெளியாகும் படைப்புகளுக்குமான பின்னடைவுகளின் தீவிரம் வெளிப்படும்.
நெட்ஃப்ளிக்ஸில் 'சேக்ரட் கேம்', 'லேலா', அமேசான் ப்ரைமில் 'தி ஃபேமிலி மேன்' போன்ற சீரிஸ் வெளிவந்தபோது, அவற்றில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்களால் அரசியல் ரீதியில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல், எந்த வயதினர் பார்க்கலாம் என்ற அறிவிப்புடன் சினிமா, சீரிஸ்களை வெளியிட்டாலும், அடல்ட் கன்டென்ட்டுகளை சிறுவர்களுக்கு கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது என்ற கருத்தும் நிலவி வந்ததை மறுக்க முடியாது.
இந்த மாதிரியான கன்டென்ட்டுகளை நெறிப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள திட்டங்களை நீதிமன்றம் கேட்டிருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.
எனினும், ஓ.டி.டி தளங்களின் தனிச்சிறப்புகளில் ஒன்றே, அங்குள்ள படைப்புச் சுதந்திரம்தான் என்ற அழுத்தமான கருத்துகள் உள்ளன. இனி, அவையும் சென்சாருக்கு ஒப்பான வெட்டுகளுக்கு ஆளானால், ஓ.டி.டி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து படைப்புகளைப் பார்ப்பதே வீண்தான் என்றும் இப்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.