சினிமா

குருபெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லணும்... என்.ஜி.கே குறித்து வாய்திறந்த தயாரிப்பாளர்

குருபெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லணும்... என்.ஜி.கே குறித்து வாய்திறந்த தயாரிப்பாளர்

webteam

நடிகர் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படம் குறித்த தகவலை தயாரிப்பாளர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படம் ‘என்.ஜி.கே’. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா என்பதால் இந்த திரைப்படம் அனைத்து தரப்பிடமும் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, ''என்னுடைய இன்னொரு படம் சாதாரணமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே என்.ஜி.கே. படத்தை தேர்வு செய்தேன். செல்வராகவனுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். என் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை நான் முழுமையாக நம்புகிறேன். படம் தீபாவளிக்கு வெளியாகாது. எங்களுக்கு கொஞ்சம் நேரம் தாருங்கள்'' என்று தெரிவித்தார்.

இது சூர்யா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் படம் குறித்த எந்த அப்டேட்டும் வராத நிலையில் தயாரிப்பாளர் பிரபு ட்விட்டரில் படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். 

அதில் ''செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்த நிலையில் நிச்சயம் அக்டோபரில் என்.ஜி.கே. குறித்த தகவல் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதள ட்ரெண்டிங்கான குணமா வாய்ல சொல்லணும் என்பதை குறிப்பிட்டு
''குருபெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லணும் முருகா'' என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.