சினிமா

"எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை" - போனி கபூர் விளக்கம் !

"எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை" - போனி கபூர் விளக்கம் !

jagadeesh

எங்கள் வீட்டில் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

 இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்ட்டிரா. இம்மாநிலத்தில் மட்டும் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல மும்பை நகரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் போனி கபூர் வீட்டில் வேலை பார்த்த ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் போனி கபூர் குடும்பத்தினரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள் என்று தகவல் பாலிவுட் வட்டாரங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து இது குறித்து போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

 அதில், "நான், என் மகள்கள் வீட்டிலிருக்கும் மற்ற பணியாளர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு நகரவில்லை. நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

 மேலும் அந்த விளக்கக் கடிதத்தில் " மும்பை மாநகராட்சி மற்றும் அதன் மருத்துவக் குழு தந்துள்ள அறிவுறுத்தல்களை நாங்கள் கண்டிப்பாகப் பின்பற்றுவோம். சரண் விரைவில் குணமடைந்து எங்கள் வீட்டுக்குத் திரும்புவார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து "நேர்கொண்ட பார்வை" படத்தைத் தயாரித்திருக்கிறார். மேலும், இதே கூட்டணி "வலிமை" என்ற படத்தைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.