'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் தனுஷ் பெயர் இல்லாமல் வெளியாகியிருக்கிறது. ஓடிடியில் வெளியிடும் தயாரிப்பாளரின் முடிவுக்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது பெயர் டீசரில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சஷிகாந்த் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் கடந்த ஆண்டே முடிந்துவிட்டன, ஆனால் கொரோனா காரணத்தால் படம் வெளியாகவில்லை. மேலும் திரையரங்கில்தான் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக 'ஜகமே தந்திரம்' படம் NetFlix ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகிறது என தகவல் வெளியாகி வந்தது. அதை இன்று படத்தின் டீசரை NetFlix தளம் வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது. அதில் பல மொழிகளில் 190 நாடுகளில் ‘ஜகமே தந்திரம்’ படம் வெளியாகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி-ல் வெளியிட தனுஷுக்கு விரும்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய நிறுவனம் மூலம் படத்தை தமிழகத்தில் வெளியிட முயற்சித்தார். ஆனால் அவரின் தொலைப்பேசி அழைப்பிற்கு கூட தயாரிப்பாளர் பதிலளிக்கவில்லை என தனுஷ் தரப்பில் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள ஜகமே தந்திரம் டீசரில் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரின் பெயரை வேண்டுமென்றே டீசரில் தவிர்த்திருக்கின்றனர். அவர் இல்லையென்றால் பெரிய தொகைக்கு படத்தை விற்பனை செய்திருக்க முடியாது எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது அதில் எந்த ஒரு பின்னணியும் இல்லை. அது தவறான கருத்து என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் தனுஷிற்கு முக்கியத்துவம் கொடுத்தே டீசர் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர். தயாரிப்பாளருக்கும் தனுஷிற்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் நடிகர்களின் பெயரை இணைக்காமல் வெளியிடுவது தவறு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஜகமே தந்திரம் பெரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் படத்தை வெளியிட ஓ.டி.டி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.