சினிமா

சித்ரா நடித்த முதல் சினிமா... "படத்தை பார்க்காமலேயே மறைந்துவிட்டார்!" - இயக்குநர் உருக்கம்

சித்ரா நடித்த முதல் சினிமா... "படத்தை பார்க்காமலேயே மறைந்துவிட்டார்!" - இயக்குநர் உருக்கம்

sharpana

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா சினிமாவில் நடிகையாக அறிமுகான 'கால்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ராவின் தற்கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

(இயக்குநர் சபரீஷுடன் சித்ரா)

இந்நிலையில், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா சினிமாவில் நடித்துள்ள முதல் படமான 'கால்ஸ்' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் சபரீஷ் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், “கால்ஸ் படத்தில் சித்ராதான் முதன்மையான கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிக்க நான் முதலில் ரித்விகாவைத்தான் அணுகினேன். ஆனால், அவர் ’அந்த கேரக்டர் தனக்கு பொருந்தாது’ என்று மறுத்துவிட்டார். பின்புதான் சித்ராவை அணுகினேன்.

இந்தக் கதையை சித்ராவிடம் சொன்னபோது, பாதியிலேயே நிறுத்தி ’கதை சூப்பராக இருக்கிறது. நான் கண்டிப்பாக நடிக்கிறேன். நீங்கள் முழுக்கதையையும் சொல்லத் தேவையில்லை” என்று உற்சாகமுடன் கேட்டதோடு நடித்தும் கொடுத்தார்.

எப்போதும், அவரின் ரோல் மாடலாக நடிகை நயன்தாராவையே குறிப்பிடுவார். ஒரு படத்தில் நயன்தாரா அணிந்திருந்த உடையைப் போன்றே கால்ஸ் படத்திலும் கேட்டிருந்தார்.

     ‘கால்ஸ்’ பெண்ணை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லர் கதை. பெண்கள் வேலையில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை காட்சிப்படுத்தியிருக்கிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே படத்தை முடித்துவிட்டோம். ஜூலையில் வெளியிட திட்டமிட்டிருந்தபோது, கொரோனாவால் அது முடியாமல் போய்விட்டது.

இதில், சோகமான விஷயம் என்னவென்றால், சித்ரா முழு படத்தையும் இன்னும் பார்க்கவில்லை. அதோடு, படப்பிடிப்பின்போது நாங்கள் அவருக்கு  தஞ்சாவூரிலிருந்து வாங்கி கொடுத்த நைட்டியைதான் தற்கொலையின்போது அணிந்திருக்கிறார். இதைப்பார்த்து இன்னும் அதிர்ச்சியானோம்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சித்ரா நடித்துள்ள கால்ஸ் திரைப்படம் வரும் ஜனவரியில் தியேட்டர்களில் வெளியிட  திட்டமிட்டிருக்கிறது படக்குழு.