சினிமா

நடிகர் விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: ட்ரோல் ஆகும் அட்வைஸ்

நடிகர் விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: ட்ரோல் ஆகும் அட்வைஸ்

webteam

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக். அவர் தன் படங்களில் காமெடி கலந்த பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பு வருவதால் அவரை பலர் ‘சனங்களின் கலைஞன்’ என்றும் ‘சின்ன கலைவாணர்’ என்றும் பட்டம் போட்டு கட்டம் கட்டிப் புகழ்ந்து வருகின்றனர். அவரும் அப்துல்கலாம், விவேகானந்தர் என சமூகத்தில் பெரிய அடையாளத்தில் உள்ளவர்களின் நல்ல கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பரப்பி வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கமான பதிவாக ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதாவது பள்ளிப் பிள்ளைகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் அவது குறித்து அவர் ஒரு யோசனையை முன் வைத்திருந்தார். அதில், “அன்பார்ந்த மாணவர் செல்வங்களே.. குழந்தைகளே.. உங்களின் கோடைவிடுமுறையை அனுபவியுங்கள். அதேநேரம் விளையாடி முடித்த பிற்பாடு அதிகமாக தண்ணீரை குடியுங்கள். பெண் பிள்ளைகள் உங்களின் அம்மாவுடன் போய் அடுப்படியில் எப்படி சமையல் செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகள் உங்கள் தந்தையுடன் போய் அவர் பணிபுரியும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுருந்தார். அந்தத் தகவலை அவர் பதிவிட்ட அடுத்த நொடி பற்றிக் கொண்டது சர்ச்சை.

அதாவது ஆண் பிள்ளைகள் என்றால் சம்பாதிக்க போகவேண்டும். பெண் பிள்ளைகள் என்றால் அடுப்படியில் கரண்டியை பிடித்துக் கொண்டு சமைத்துக் கொட்ட வேண்டும். இதுதான் உங்கள் பகுத்தறிவுக் கொள்கையா? ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை இந்தப் பெண் அடிமை மனோநிலையில் இருந்து விடுவிக்க முடியாதா? என வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தச் செய்தி பல கட்டங்களில் ட்விட்டரில் ட்ரோல் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு விவேக் எதுவும் பதில் அளிக்கவே இல்லை. மிக மெளனமாகவே இருக்கிறார். அவரது மெளனம் மேலும் நெட்டிசன்களை வேகப்பட செய்துள்ளது.