தான் யாருக்கும் போட்டியில்லை என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விவேக் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ’இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார். சமூக அக்கறையுள்ளக் கருத்துகளைப் பேசுவதால் ‘சின்னக் கலைவாணர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
ரஜினி ,விஜயகாந்த், அஜித்,விஜய்,சூர்யா,மாதவன், தனுஷ்,சிம்பு என தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கும் நண்பராக வந்து காமெடியில் கலக்கியுள்ளார்.
இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைத்தும் ஆஹா சொல்ல வைத்தன. அஜித்தா? இல்ல விவேக்கா? என்று நம்மை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தின் ‘ஆரம்பம்’ பட லுக்கில் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் போட்டோ ஷூட் நடத்தியிருப்பது வைரல் ஆகியது.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் "அன்பு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.எனது சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் பார்த்து விட்டு, “ஹீரோக்களுக்கு( பெயர் குறிப்பிட்டு ) போட்டியாக விவேக்” என்று செய்தி வருகிறது.நான் யாருக்கும் போட்டி அல்ல. யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்