அஜித் படத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக நடிகர் விவேக் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அஜித் விறுவிறுப்பாக நடித்து வரும் திரைப்படம் ‘விசுவாசம்’. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா, போஸ் வெங்கட் எனப் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தினை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். நான்காவது முறையாக அஜித்தை இயக்கும் இயக்குநர் என்ற பெருமையையும் இவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. மேலும் ராஜமுந்திரியிலும் எடுப்பதற்கான திட்டம் இருந்தது. இறுதி நேர மாறுதல்களால் அத்திட்டம் தள்ளிப் போனது.
இந்நிலையில் நடிகர் விவேக் மறுபடியும் அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் இணைய இருக்கிறார். அது சம்பந்தமாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.