சினிமா

திரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி!

webteam

பாலகோட் விமானப்படைத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாராகிறது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதையடுத்து இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத பயிற்சி முகாமை குறிவைத்து குண்டு வீசியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தச் சம்பவங்களை மையமாக வைத்தும் நம் படைகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையிலும் சினிமா தயாராகிறது. இதை இந்தி நடிகர் விவேக் ஓபராய் தயாரித்து நடிக்கிறார்.

இந்தி, தமிழ்,தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் அந்தந்த மொழி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள். படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

பாலகோட் விமானப்படை தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையால் சிறை பிடிக்கப்பட்ட, விங் கமாண்டர் அபிநந்தன் கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்று முடிவு செய்யவில்லை.  

இந்தப் படம் குறித்து விவேக் ஓபராய் கூறும்போது, ஒரு இந்தியனாக, நமது படையின் வீரத்தை போற்ற வேண்டியது என் கடமை. அபிநந்தன் போன்ற நமது வீரர்களின் சாதனைகளை இந்தப் படத்தின் மூலம் வெளிக்கொண்டு வர இருக்கிறோம். பாலகோட் தாக்குதல், இந்திய விமானப்படை மிகவும் திறமையாகத் திட்டமிடப்பட்டு நடத்திய தாக்குதல்.  எதிரிகளின் கோட்டைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய அபிநந்தன் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான திரைப்படத்துக்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு நியாயமாக நடப்பேன்’ என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் ஓபராய்.