சினிமா

“என் தாயை தப்பாக பேசினார் விஷால்; அவருக்கு ஆப்பு காத்திருக்கிறது”- மிஸ்கின் காட்டம்

webteam

துப்பறிவாளன் 2 படம் தொடர்பான சர்ச்சையை மேடையில் உடைத்து, இயக்குநர் மிஸ்கின் விளக்கமளித்துள்ளார்.

துப்பறிவாளன் படத்தின் மூலம் விஷால்- மிஸ்கின் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. இந்த படம் மக்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இராண்டாம் பாகத்தில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்தது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்த நிலையில் விஷாலுக்கும் - மிஸ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஷால் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மிஸ்கின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் விஷால். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மிஸ்கின் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காட்டமாக பேசியிருக்கிறார்.

அதில் “ ஒரு வருடமாக துப்பறிவாளன்-2 படத்தின் கதையை மிகவும் கஷ்டப்பட்டு எழுதினேன். யாருக்காக எழுதினேன் என்றால் எனது சகோதரனுக்காக எழுதினேன். ஒட்டு மொத்த சமூகமும் அவனை தவறாக பேசும்போது நான் அவனை சகோதரனாக பாவித்தேன். என்னுடைய உண்மையான சகோதரனை கூட நான் அப்படி நடத்தியது இல்லை.

துப்பறிவாளன் பாகம் ஒன்றின் இறுதி காட்சிகளை எடுக்கும்போது மிகப்பெரிய ஸ்ட்ரைக். அதனால் 3 உதவி இயக்குநர்களை வைத்து தனி ஆளாக படப்பிடிப்பை முடித்தேன். படப்பிடிப்பு நடத்த பணம் இல்லாததால் 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக்காட்சியை 6 மணி நேரத்தில் எடுத்து படத்தை வெளியிட்டேன்.

அந்த சமயத்தில் விஷாலுக்கு தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வி படங்களாக அமைந்திருந்த நிலையில் துப்பறிவாளான் படம் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு பிறகு என்னிடம் விஷால் கதை கேட்டான். அதற்கு, உனக்கு நிறைய கடன் இருக்கிறது. நான் தற்போது கோகினூர் வைரத்தை வைத்து ஒரு கதை எழுதுகிறேன். அந்த படத்தில் நீ நடித்தால் பல மொழிகளுக்கு நீ சென்று சேர்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்றேன்.

கதையை கேட்ட பாப்பி என்ற தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதன் பின்னர் விஷாலிடம் கதையை கூறினேன். கதையை கேட்டுவிட்டு என்னை கட்டிப்பிடித்து அழுதான். மேலும் தானே இந்தக் கதையை தயாரிக்கிறேன் என்றும் கூறினான். ஆனால் அதற்கு, இப்படத்தை தயாரிக்க 20 கோடி செலவாகும் அதனால் உன்னால் தயாரிக்க முடியாது என்றேன்.

ஆனால் அதை விஷால் கேட்கவில்லை. இந்தப் படத்தை எனக்கே தந்து உதவி செய்யுங்கள் என்றான். ஆகவே நானும் ஒத்துக்கொண்டேன். படத்திற்கான எழுத்துப் பணிக்கு நான் வாங்கிய தொகை ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். அதில் நான் செலவு செய்தது ஏழு லட்சம் ரூபாய். ஆனால் பத்திரிகைகளில் திரைக்கதைக்கு மட்டும் 35 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக செய்திகள் வெளியாகின. அதனை விஷால் நிரூபிக்க வேண்டும். மேலும் படப்பிடிப்புக்கு 32 கோடி செலவு செய்ததாகவும் ஒரு நாளைக்கு மட்டுமே 15 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் விஷால் கூறியிருக்கிறார். 32 நாள் படப்பிடிப்பு நடத்தினேன். இரண்டையும் பெருக்கினால் கூட 10 கோடியை தாண்டாது. எனவே அதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.

ஒவ்வொரு இடத்திலும் நான் அவமதிக்கப்பட்டேன். நான் தம்பி என நினைத்தேன். ஆனால் என் தாயை தரக்குறைவாக திட்டினான் விஷால். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவருக்கு நான் என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம் கடந்த மூன்று வருடங்களாக அவனிடம் அறத்தோடு இருந்தது. மற்றும் கதை எழுதி கொடுத்தது.

எனக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்கக் கூடாது என்று விஷால் கூறுகிறான். அவர் ஒரு தயாரிப்பளாரின் மகன். நான் ஒரு ஏழை தையல்காரனின் மகன். அதனால் நான் எந்த வேலையையும் செய்து பிழைப்பு நடத்த முடியும். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று..? அதனால் நீ என்னை கெட்டவன் என்று கூற வேண்டாம். படத்தின் கதையை என்னிடம் கேட்டு உயிரை எடுத்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் அந்தக் கதையை அவனிடம் கொடுத்தேன்.

நீ யார் என்று இந்த சமூகத்துக்கு தெரியும். நீ தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன செய்தாய் என்று எனக்குத் தெரியாதா? என்னை தயாரிப்பாளர் சங்கத்தில் நிற்க வைத்து தயாரிப்பாளர் தாணுவிற்கு எதிராக தவறாக பேச சொன்னான். இந்த படம் நின்றதற்கு முக்கிய காரணம் விஷாலின் நபர்களான ரமணாவும், நந்தாவும்தான். நான் கேட்டதெல்லாம் ஒன்றரை வருடத்திற்கு முன்பு பேசிய 5 கோடி ரூபாய் சம்பளத்தை கேட்டது.

அதற்கு துப்பறிவாளன் ஓடவில்லை என்று கூறினான். அப்போது நான் கேட்டேன் அப்படியென்றால் ஏன் துப்பறிவாளன் பாகம் 2 எடுக்க வேண்டும் என்று. அதற்கு இந்தக் கதை தனக்கு பிடித்திருப்பதாக விஷால் கூறினான். நானோ சைக்கோ படம் ஓடியபிறகு எனக்கு 5 கோடி ரூபாய் கொடு என்று கூறினேன்.

சைக்கோ படம் வெளியான பிறகு விஷாலிடம் கேட்டேன். அதற்கு சைக்கோ படம் ஓடவில்லை என்றார். அதன் பின்னர் விஷாலிடம் பேச முடியாது என்று வெளியேறினேன். அப்போது என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டினார் விஷால். அதனை எனது தம்பி தட்டிக்கேட்டபோது அவனை அடித்தார்கள். இனி உன்னை விட மாட்டேன். இனி உன்னிடம் இருந்து தமிழ்நாட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு தமிழனுடைய கோபம். நான் பயப்படவில்லை. விஷால் உனக்கு ஆப்பு இருக்கிறது. இன்னையோடு நீ தூங்கவே மாட்டாய். வா போருக்கு” என்று காட்டமாக பேசினார்.