விஷால் நடிக்கும் ‘விஷால் 31’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா வில்லனாகவும் விஷால் ஹீரோவாகவும் நடிக்கும் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், விஷால் தனது விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் நடித்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்படத்தை ’குள்ளநரிக்கூட்டம்’, ‘தேன்’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய து.பா.சரவணன் இயக்கவிருக்கிறார். இவர், ‘எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறும்படத்தை பார்த்து பாராட்டிய விஷால் இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதிகாரம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியனின் கதை என்று சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் அறிவிப்பு குறித்த மோஷன் போஸ்டர் வீடியோவின் இசையே மிரட்டலாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. ஏற்கனவே, விஷால் - யுவன் ஷங்கர் ராஜா ’சண்டக்கோழி’, ’சண்டக்கோழி 2’, ’அவன் இவன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.