விஷால்
விஷால் pt web
சினிமா

“இப்போது இருக்கும் கட்சிகளே அதிகம்.. ஆனாலும்..” - நடிகர் விஷால்

Angeshwar G

சென்னை சேத்துப்பட்டில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த விஷால், தன்னுடைய மக்கள் நல இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார். “பொழுதுபோக்கிற்காக வரக்கூடிய இடம் அரசியல் இல்லை” என கூறிய விஷால், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வராமல் செல்பவன் இல்லை” என்றும் தெரிவித்தார்.

விஜய்யின் புதிய அரசியல் கட்சி தொடக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், அவரது அரசியல் வருகையை வரவேற்பதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் - தமிழக வெற்றி கழகம்

செய்தியாளர்களிடையே விஷால் மேலும் கூறுகையில், “நற்பணி இயக்கத்தின் முதன்மை நோக்கம், இல்லாதவர்களுக்கு நாங்கள் எங்களுடைய கைகளை நீட்டுகிறோம் என்பதுதான். நாங்கள் முடிந்த அளவு இருக்கிறவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பாலமாக செயல்படுகிறோம்.

இன்றும் குடிநீர் வசதி இல்லாமல் எத்தனையோ கிராமங்கள் உள்ளன. போர்வெல் போட முடியாமல் எத்தனையோ விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அரசியல் என்பது பொதுப்பணி. அது சமூக சேவை. சினிமா துறை, மற்ற துறைகளைப் போல் அரசியல் என்பது துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துவிட்டு போற இடமும் கிடையாது. எல்லோரும் அரசியல்வாதிகள்தான். அரசியல் என்பது பொதுமக்களுக்கு யார் வேண்டுமானாலும் நல்லது செய்வதற்கான ப்ளாட்ஃபார்ம்.

2026 ஆம் ஆண்டு தேர்தல் வரப்போகிறது. நான் வரமாட்டேன், வரப்போகிறேன் என்றெல்லாம் இப்போது சொல்லிவிட்டு வராமல் இருப்பது போன்றெல்லாம் செய்யமாட்டேன். அந்தந்த நேரத்தில், அந்தந்த காலகட்டத்தில் எந்தெந்த முடிவெடுக்கப்படும் என்று தெரியாது. நான் நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் ஆவேன் என எனக்கே தெரியாது. 2004 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறேன். எனக்கு நடிகர் சங்க அடையாள அட்டை கொடுத்த ராதாரவியை எதிர்த்து நிற்பேன் என கனவிலும் நினைத்தது இல்லை. தயாரிப்பாளர் சங்கத்திலும் நான் நிற்பேன் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று அவை நடந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். மனதார வாழ்த்துகிறேன். என்னைப் பொறுத்தவரை மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சி தேவையில்லை. அனைவரது குறிக்கோளும் ஒன்றுதான். அது மக்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையே அதிகம். அதையும் தாண்டி ஒருவர் வந்து நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால் தம்மால் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் வருகிறார்” என்றார்.