துருக்கியில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் விஷால், பைக்கில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார்.
தெலுங்கில் ஹிட்டான ’டெம்பர்’ படம் தமிழில் ’அயோக்யா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் விஷால் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் சுந்தர். சி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். விஷால் ஜோடியாக, தமன்னா நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது. தொடர்ந்து அங்கு 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அங்குள்ள கேப்படோசியா (cappadocia) நகரில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. இது, ‘சந்திரமுகி’ படத்தில் நயன்தாராவும் ரஜினியும் பாடும் ’கொஞ்ச கொஞ்ச நேரம்’ பாடலின் படப்பிடிப்பு நடந்த இடம்.
(கேப்படோசியா)
இங்கு பைக் சண்டைக் காட்சியை ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ் படமாக்கினர். அதாவது காட்சிப்படி, ஏடிவி என்ற நான்கு சக்கரங்கள் கொண்ட பைக்கில் செல்லும் விஷால் எதிரிகளுடன் மோத வேண்டும். அப்போது விஷால் வேகமாகச் சென்றபோது பைக் தடுமாறி கவிந்தது. இதில் விஷாலின் இடது கையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தினர். படுகாயமடைந்த விஷாலை மீட்டு, உடனடியாக அங்குள்ள மருத் து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலில் கட்டுப் போடப்பட்ட நிலையில் அவர் ஓய்வெ டுத்து வருகிறார். இதற்காகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.