சினிமா

தன்ஷிகாவை வசைபாடிய டி.ஆர்.க்கு விஷால் கண்டனம்

தன்ஷிகாவை வசைபாடிய டி.ஆர்.க்கு விஷால் கண்டனம்

webteam

திரைப்பட விழா ஒன்றில் நடிகை தன்ஷிகா தனது பெயரைக் குறிப்பிடாததால் இயக்குனர் டி.ராஜேந்தர் கடுமையாக பேசியதற்கு நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டி.ஆர். அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.


டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டி.ஆர். சுட்டிக்காட்டிய பின்னர் சாய் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய் தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டி.ஆர். போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.

மேலும், “திரையுலகில் ஒரு பெண், நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய் தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டி.ஆர். அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விஷால் கூறினார்.