சினிமா

ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு - விஷால் பதில்

webteam

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பதிலளித்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோருடன், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு, கோவை சரளா, நடிகர் பிரசன்னா, பசுபதி, ரமணா, நந்தா, சோனியா போஸ், மனோபாலா, பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். அதன்படி செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

நேற்று மாலை 5 மணியோடு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் பாக்யராஜ் அணியில் போட்டியிடும் விமல், ரமேஷ் கண்ணா மற்றும் ஆர்த்தி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தா தொகையை கட்டாதது உள்ளிட்ட காரணங்களால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கராதாஸ் அணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு பேசிய பாக்யராஜ், நடிகர் சங்க கட்டிட பணி விரைந்து முடிய வேண்டும் என்பதே ரஜினி கமலின் விருப்பம் எனவும் நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என ரஜினி சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ அவர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்லும் முன் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். ஒவ்வொரு நடிகர்களையும் சந்தித்து நாங்கள் என்ன செய்துள்ளோம் என்று சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அதை சொல்லி ஓட்டு போட வேண்டும் என்று கேட்போம். அவர்கள் வாக்களிப்பார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை” எனத் தெரிவித்தார்.