படப்பிடிப்பின்போது தனுஷிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.
கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம், ‘வி.ஐ.பி - 2’ . தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்துள்ளனர். சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் பேசிய இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த், ’தனுஷ் எனக்கு நல்ல மெண்டர், எனக்கு சீனியர். அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். வி.ஐ.பி படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தனுஷ் மற்றும் கஜோல் மேடத்திற்கும் நன்றி’ என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ‘தம்பி தனுஷூடன் நான் நடித்த ’வி.ஐ.பி’ முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் சிறப்பாக உருவாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’காலா’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த முதல் காட்சியிலேயே நான் பிறவி பலனை அடைந்ததாக உணர்கிறேன்’ என்றார்.