சினிமா

கமல்ஹாசனின் சாதனையை முறியடிக்கிறாரா விக்ரம்?

கமல்ஹாசனின் சாதனையை முறியடிக்கிறாரா விக்ரம்?

webteam

‘கோப்ரா’ படத்தின் மூலம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசனின் சாதனையை நடிகர் விக்ரம் முறியடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகின்றன. வரும் மே மாதம் 22 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக தெரிகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல.

இந்நிலையில், 'கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியாக உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் பல தோற்றங்களில் வெளிப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

'கோப்ரா' படத்திற்காக 20க்கும் மேற்பட்ட வித்தியாசமான வேடங்களில் விக்ரம் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பார்ப்பதைப் போல போஸ்டர் வெளியானால் ஒரு படத்தில் ஒரே நடிகர் இத்தனை வேடங்களில் நடித்திருப்பது தமிழில் இதுவே முதல்முறையாக அமையும்.

இதற்கு முன்னதாக தமிழில், சிவாஜி கணேசன் 1964 ஆம் ஆண்டு வெளியான 'நவராத்திரி' படத்தில் 9 விதமான வேடங்களில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் 2008 ஆம் ஆண்டு வெளியான 'தசாவதாரம்' படத்தில் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார். இதுவரை அதுவே சாதனையாக இருந்து வருகிறது. அந்த இருவரின் சாதனையும் 'கோப்ரா' மூலம் விக்ரம் முறியடிப்பார் எனப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

'கோப்ரா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ரஷ்யாவில் படமாக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.