விக்ரமின் ‘கோப்ரா’ படம் வரும் ரமலான் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து எடுத்து வரும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்தான் கொல்கத்தாவில் நிறைவடைந்தது. அடுத்த படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் இதன் வெளியீடு குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே மாதம் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது ரமலான் பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல.
இதற்கிடையே, இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து கடந்த வாரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்திருந்தார். அதில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியிடப்படும் என்ற தொனியில் கூறியிருந்தார். 'கோப்ரா' படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆகவேதான் அவரது மகன் துருவ் விருது விழா நிகழ்ச்சியில் கூட விக்ரமினால் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னையை அடுத்து யூரோப் மற்றும் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.