விக்ரம் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்’. இந்தப் படம் 2003ல் வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஹரியே இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே போல் ஹாரிஸ் ஜெயராஜ் மெலோடியில் வெளி வந்த ‘சாமி’ இசை ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. ‘சாமி ஸ்கொயர்’படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விக்ரம் நடிப்பில் வெளியான ‘கந்தசாமி’ படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். மேலும் அந்தப் படத்தில் விக்ரமை பாடவும் வைத்திருந்தார். அவரது இசையில் மீண்டும் விக்ரம் பாட இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. இந்தச் சந்தேகத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
“நான் விக்ரமை பாட வைக்க விரும்புகிறேன். ஆனால் நானும் இயக்குநரும் இன்னும் முடிவெடுக்கவில்லை. விக்ரம் ஒரு நல்ல பாடகர். அவர் பாடினால் பாடலின் வரிகள் கவனிக்கும் படியாக இருக்கும். நான் ‘கந்தசாமி’ படத்திற்கு இசையமைக்கும் போது அவர் என்னையே எல்லா பாடல்களையும் பாடக் கேட்டுக் கொண்டார். அந்தப் பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் வேறு விஷத்தை கூறியிருக்கிறார்.
ஹாரிஸ் முதல் பாகத்தில் மென்மையான ட்யூன்ஸ் போட்டிருந்தார். அவருடைய இசை ரசனை அபாரம். நாம் சேர்ந்து வேலை பார்க்கும்போது ஒரு பாடலாவது மெலோடி இருக்க வேண்டும். இந்தப் படத்தில் முழுப் பாடல்களும் புதிய வடிவில் இருக்கும். குரல், ட்யூன், பாடல் வரிகள் என அனைத்தும் புதிய மாதிரி இருக்கும்” என்றிருக்கிறார். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் உடனான நட்பிற்கும் அவர் பதிலளித்துள்ளார். “ அவரும் நானும் பல முறை சந்தித்து பேசிக் கொள்வோம். அவரது புதிய ஸ்டியோவிற்கு கூட அழைத்தார், போயிருந்தேன். ஒரு நல்ல பாடலை நான் கேட்டுவிட்டால் உடனே அவருக்கு போன் போட்டு பாராட்டுவேன். அனிருத் இசையமைத்த பல பாடல்களை பாராட்டிக் கூட நான் அவருக்குப் பேசியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.