விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்குகிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ’டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் வெளியான ’இமைக்கா நொடிகள்’ வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விக்ரம். விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், விக்ரமுக்கு வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார் என்பதுதான். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
’கோப்ரா’ படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மேலும், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. ’விக்ரம் 60’ படப்பிடிப்பிலும், ’பொன்னியின் செல்வன்’படப்பிடிப்பிலும் விக்ரம் பிஸியாக இருந்ததால், ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது, ‘விக்ரம் 60’ படப்பிடிப்பு முடிந்துள்ளதால் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ’கோப்ரா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்குகின்றனர். இதற்காக, அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கொல்கத்தா சென்று உள்ளனர்.