ஏற்காட்டில் ஹெலிகாப்டரில் எடுப்பட்ட சண்டைக் காட்சிகளில் நடிகர் விக்ரம் பங்கேற்று நடித்துள்ள அவரது ஆக்ஷன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவுக்கு இது பார்ட் 2 காலம். எந்திரன் 2, விஸ்வரூபம் 2, கலகலப்பு 2 என பல படங்களின் பாகம் 2 தயாராகி வருகிறது. இந்தப் பட்டியலில் தற்சமயம் விக்ரமும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை சாமி ஸ்கொயர் என்ற தலைப்பில் மீண்டும் இயக்கி வருகிறார் இயக்குநர் ஹரி. அதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில் இன்று ஏற்காட்டில் நடந்த படப்பிடிப்பில் விக்ரம் ஹெலிகாப்டரில் சண்டையிடும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதிகப்படியான கேமிராக்களை பயன்படுத்தி இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அதிகமான ஹெலிகேம்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சண்டைக் காட்சியில் கீர்த்தி சுரேஷூம் பங்கேற்று உள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு சவாலான பாத்திரம் என்று கூறப்படுகிறது. த்ரிஷா வழக்கமான நாயகியாக வருகிறார். அதோடு அவரது பங்கு படத்தில் இடைவேளைக்குப் பின்புதான் வருகிறது என்றும் சொல்கிறார்கள். கதைப்படி த்ரிஷா ப்ளாஷ் பேக் காட்சிகளில் மட்டுமே வருகிறார் என்கிறது படக்குழுவின் நெருங்கிய வட்டாரம்.