விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 33-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என பெயரிடப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களை கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கதாநாயகன் என்று மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
'விக்ரம் வேதா', 'பேட்ட' போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'சைரா நரசிம்மா ரெட்டி‘ படத்திலும் நடித்தார். தற்போது விஜய் 64 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஜயுடன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 33-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்துக்கு‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்குகிறார். இந்தப்படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.