லியோ
லியோ sun tv
சினிமா

”இருந்தாலும் அந்த வார்த்தையை விஜய் தவிர்த்திருக்கலாம்” ஓவர் ஹைப் ஏத்தி ட்ரெய்லரில் மாஸ் காட்டிய லியோ

Rajakannan K

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் அறிவிப்பு வெளியானது முதல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என எப்போழுதோ அறிவிப்பு வெளியிட்ட லியோ படக்குழு ட்ரெய்லருக்காக ரசிகர்களை காக்க வைத்துவிட்டது. படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ட்ரெய்லர் எப்போழுது என்றே அறிவிப்பு வெளியிடாமல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

LEO

இத்தகைய சூழலில்தான் அக்டோபர் 5 ஆம் தேதி அதாவது இன்று ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு. ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்தார்கள். எந்த நேரத்தில் வெளியாகும் என்பதை தெரிவிக்கவில்லை. இன்று மாலை 4 மணி வரையிலும் கூட ட்ரெய்லர் அறிவிப்பு வெளியாகவில்லை. ரசிகர்கள் கொந்தளித்து ட்ரெய்லர் வெளியாகுமா அல்லது தள்ளிப்போகுமா என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒரு வழியாக 6.30 மணியளவில் ட்ரெய்லர் வெளியாகும் என 5 மணியளவில் அறிவிப்பு வந்தது. ஹைப்பை ஏற்றுவதற்கு இந்த வழியை படக்குழு கையாண்டார்களா அல்லது ட்ரெய்லர் ரெடி ஆவதில் தாமதம் என கசிந்த தகவல் உண்மையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

leo Trailer

ஒருவழியாக மாலை 6.30 மணிக்கு லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்ததை திருப்தி படுத்தும் வகையில் லியோ படத்தின் ட்ரெய்லரை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள். விஜய்க்கு மாஸ் கொடுக்கும் வகையில் சண்டை காட்சிகள் இருக்கும் என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. அதேபோல், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் போன்ற கதாபாத்திரங்களில் மாஸ் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. த்ரிஷா விஜய்யின் மனைவியாகவும் இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

அந்த வார்த்தையை தவிர்த்திருக்கலாம்!

இந்தப் படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல் தோன்றுகிறது. த்ரிஷாவின் கணவராக பார்த்தி என்ற கதாபாத்திரத்திலும், லியோ தாஸ் என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது போல் தெரிகிறது. ட்ரெய்லரின் பாதியில் விஜய் கேரக்டரில் ஏற்படும் மாற்றமும் அதன் ஸ்டண்ட் காட்சிகளும் மிகவும் வெறித்தனமாக இருக்கிறது. அமைதியான குடும்ப வாழ்க்கையில் இருக்கும் கேரக்டர் தான் பின்னால் இப்படி தன்னுடைய பழைய ரூபத்திற்கு மாறுகிறாரா என்பதும் சஸ்பெண்ஸ் தான்.

leo trailer

இவனுக நிறுத்தப்போறதில்ல.. ஈசல் கூட்டம் மாறி உன்னை தேடி வந்துகிட்டு தான் இருப்பாங்க” என்று கௌதம் மேனனும், ’நீ எங்க ஓடிப் போய் ஒளிஞ்சாலும் உன்னத் தேடி வருவேன்னு உனக்கு தெரியும்’ என்று அர்ஜூனும், ’நீ ஊரை ஏமாத்தலாம், உலகத்த ஏமாத்தலாம் என்னைய ஏமாத்த முடியாது’ என சஞ்சய் தத்தும் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

leo trailer

ட்ரெய்லரின் தொடக்கத்தில் விஜய் ஒரு கதை சொல்கிறார். இது விஜய் கேரக்டரின் தந்தை கதாபாத்திரத்திற்கும் அதன் இளம் வயதில் நடந்த சம்பவத்திற்கும் பின்னர் அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் கழித்து கதை நடப்பது போலவும் இருக்கும் என்று தோன்ற வைக்கிறது. மொத்தத்தில் லியோ பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த ட்ரெய்லரின் ஒரு இடத்தில் *** என்ற தகாத வார்த்தையை பயன்படுத்தி இருப்பதை இப்பொழுதே பலரும் சுட்டிக்காட்ட தொடங்கியுள்ளனர். விஜய் போன குடும்ப ரசிகர்கள் அதிகம் கொண்ட மாஸ் ஹீரோ இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், திரைப்படத்தை பொறுத்தவரை அது இயக்குநரின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.