நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர்களில் சர்கார் டீஸருக்கான கவுன்ட்டவுனை தொடங்கிவிட்டனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான "மெர்சல்" படத்துக்கு பின்பு "சர்கார்" படம் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதால், இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே விஜய்யை வைத்து இயக்கிய "துப்பாக்கி" மற்றும் "கத்தி" ஆகியவை அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இந்த சர்கார், முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கும் மூன்றாவது படம் என்பதால் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சர்கார் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே விஜய்யின் "பைரவா" படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் சர்காரின் டீசர் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19, மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தது.
"நாளைய தீர்ப்பு" படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று அனைத்து தரப்பு மக்களையும் அதிகமாக கவர்ந்திருக்கிறார் விஜய். அறிமுகமான படத்தில் இருந்து தன் பெயருக்கு முன்பு "இளைய தளபதி" என்ற பட்டத்தை சேர்த்துக்கொண்டவர். கடைசியாக வெளியான "மெர்சல்" படத்தில் இருந்து "தளபதி" விஜய்யாக மாறினார். இப்போது டாப் கியரில் தன்னுடைய சினிமா வாழ்கையில் இருக்கும் விஜய், சர்கார் படம் மூலமாக இன்னும் உச்சத்துக்கு போக நினைக்கிறார். அதன் வெளிப்பாடாக வெளிப்படையாகவே அமைந்தது "சர்கார்" இசை வெளியிட்டு விழாவின் போது அமைந்த விஜயையின் பேச்சு. இதன் காரணமாகவே சர்காரின் டீஸர் அதிகரித்திருக்கிறது.
‘சர்கார்’ அரசியல் படம் எனத் தெரிந்த நிலையில், டீசரில் அரசியல் வசனங்கள் ஏதும் இடம்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் "கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் சர்கார் படத்தில் இருக்கும் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அதனால்தான் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு சுந்தர் என பெயர் வைத்துள்ளேன்" என தெரிவித்திருந்தார். மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் என கூறியிருந்தார்.
முருகதாஸின் இந்தப் பேட்டிக்கு பின்பு சர்கார் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாகிவிட்டது. விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தின் டீஸராக மட்டுமே இதனை பார்க்கவில்லை. தங்களது ஆதர்ச நாயகனின் அரசியல் டீஸராகவும் இது அமையலாம் என்ற ஆவலுடன் இன்று மாலை வரை காத்திருக்கின்றனர்.