விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீன்குமார், மாஸ்டர் மற்றும் ஒத்தைக்கு ஒத்தை படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் அவர் நடித்துள்ள காட்சி, விஜய்யின் கதாபாத்திரத்தை ஆரம்பக்காட்சிகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
"லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்திற்காக நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஏதோ காரணத்தால் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க பொருத்தமாக இருப்பேன் என்று லோகேஷ் நினைத்தார்" என்று நினைவுகூர்ந்துள்ளார் பிரவீன்குமார்.
விஜய்யுடன் நடந்த முதல் சந்திப்புப் பற்றிப் பேசிய அவர், "முதலில் விஜய்யை படப்பிடிப்புத் தளத்தில்தான் சந்தித்தேன். முதல் நாளே அவருடன் சேர்ந்து நடித்தேன். ஆனால் அவருடன் பேசவில்லை. பிறகு நடந்த படப்பிடிப்பில் அவருடன் பேசினேன்" என்றார்.
மேலும், உற்சாகம் பொங்கப் பேசிய பிரவீன், "என் நடிப்பு பற்றிப் பாராட்டினார் விஜய். அப்புச்சி கிராமத்தில் வந்த 'என் கண்ணுக்குள்ளே...' பாடலைப் பார்த்ததாகக் கூறினார். படம் வெளியான காலகட்டத்தில் அந்தப் பாடல் பிரபலமாக இருந்தது. நீண்ட முடியில் அழகாக இருப்பதாகவும், நீளமாக முடி வளர்க்கும்படி விஜய் கூறினார். ஊரடங்கு நாட்களில் நீளமாக முடி வளர்த்துவிட்டேன். இனிமேல் நல்ல கதாபாத்திரங்கள் வரும் என நினைக்கிறேன் " என்றார்.
மாஸ்டர் படத்தின் ஆரம்பக்காட்சிகளில் 25 நிமிடங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கும் பிரவீன்குமார், சண்டைக் காட்சிகளிலும் சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது பிரவீன்குமார், ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.