இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை படத்தில் இணைந்த இந்தக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன. மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் தனது ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை தற்போது லாபம் என தொடர்ச்சியாக இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசி வருகிறார்.
அந்த வரிசையில் வெளிவந்துள்ள லாபம் படத்தில் ‘தொழிற்சாலை இயங்குனாதான் விவசாயமும் மக்களும் வாழமுடியும் என்று நம்ப வைத்துவிட்டார்கள். விவசாயம் பண்ணா மட்டும்தான் தொழிற்சாலை இயங்க முடியும். அதுதான் உண்மை”
”மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஸ்டாலின், மாசேதுங் எல்லாம் படிச்சிட்டு புரட்சி புரட்சின்னு பேசுறீங்க?” போன்ற வசனங்களும் சிவப்பு நிறத்துடன் முடியும் டிரைலரும் அக்மார்க் இடதுசாரிய சிந்தனை கொண்ட படம் என்பதையே உணர்த்துகிறது.
மாசேதுங், ஸ்டாலின், லெனின்,ஏங்கல்ஸ், மார்க்ஸ்
இந்நிலையில், எஸ்.பி ஜனநாதன் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஸ்டாலின் மற்றும் சீனாவில் கம்யூனிசத்தை தோற்றுவித்த சீனாவின் தந்தை மாசேதுங் என ஆகிய புரட்சியாளர்களை வழக்கம்போல வசனங்களில் வைத்து மக்கள் மனதில் மீண்டும் இடம்பெறச்செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, படத்தின் போஸ்டரில் விஜய் சேதுபதி தாடியோடு இருப்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ் தாடியினை நினைவுபடுத்தி நெகிழ வைக்கிறது. இப்படத்தில், ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.