விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படம் `ஃபீனிக்ஸ்'. தமிழில் ஜூலை மாதம் வெளியான இப்படம் நவம்பர் 7ம் தேதி தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் பேசிய விஜய் சேதுபதி "இது எல்லாம் துவங்கியது நான் `ஜவான்' நடித்துக் கொண்டிருந்த போதுதான். அப்போதுதான் நான் மாஸ்டரை (அனல் அரசு) சந்தித்தேன். அவர் எனக்கு கதையை சொல்லி, இதுல உங்கள் மகன் நடிக்க வேண்டும் எனக் கூறினார். சரி மாஸ்டர் நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளுங்கள் என்றேன். அதற்குப் பிறகு எனக்கு எதுவும் தெரியாது, அவர்கள் இருவரும் பேசினார்கள், படம் எடுத்தார்கள். நான் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது என் மகனுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும். ஒரு அப்பாவாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சிறுவயதில் இருந்து அவனுக்கு ஆக்ஷன் என்றால் பிடிக்கும். ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பான். அவனுக்கு 16 வயது ஆன பிறகு, என்னிடம் வந்து அப்பா நீங்கள் சாதாரண படம் நடிக்காதீர்கள். ஆக்ஷன் படங்கள் நடியுங்கள் என என்னை மூளைச் சலவை செய்வான். வழக்கமாக அப்பாக்கள் தான் மகனுக்கு பரிந்துரை சொல்வார்கள். ஆனால் அவன் பார்க்கும் படங்களை எனக்கு பரிந்துரை செய்வான். அவனுக்கும் அப்படி படங்கள் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது, கடைசியில் அதுவே நடந்தது. அவனுக்கு நடிப்பில் ஆர்வம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நாள் நான் நடிகனாக விரும்புகிறேன் என்றான். அது எப்படி நடக்கும் எனத் தெரியாது, ஆனால் அதற்கு உன்னை தயார்படுத்து என சொன்னனேன். அவன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கையில் இதை சொன்னான், அவன் இரண்டாம் ஆண்டு செல்லும் போது வாய்ப்பு வந்தது. இதற்கு எல்லாம் காரணம் அனல் அரசு மாஸ்டர் மற்றும் ராஜலட்சுமி மேடம்.
வரலட்சுமியுடன் நான் விக்ரம் வேதா, மைக்கேல் படங்களில் நடித்திருக்கிறேன். அதைத்தவிர பெரிதாக சந்தித்ததில்லை. ஆனாலும் அவரின் எனர்ஜி எப்போதும் குறைந்ததே இல்லை. அது எந்த இடமாக இருந்தாலும் எனர்ஜியாகாவே இருப்பார். சீக்கிரமே அவர் ஒரு எனர்ஜி ட்ரிங்க் கம்பெனியை அவர் பெயரில் துவங்கலாம்.
நான் இப்போது பூரி அவர்களின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு தெலுங்கு படங்கள் நடித்தால் நன்றாக தெலுங்கிக்கு பேசிவிடுவேன் என நினைக்கிறேன். அப்போது வரை சற்று பொறுத்துக்க கொள்ளுங்கள். பின்பு நான் தெலுங்கில் எழுதக் கூட செய்வேன். நான் நம்புவதெல்லாம் ஒன்றுதான். எந்த மொழியில் படம் எடுத்தாலும், எங்கு சென்றாலும், படம் நன்றாக இருந்தால், அது பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆனால், அவர்கள் படத்தை கொண்டாடுவார்கள். அப்படித்தான் நாம் பல மொழிப்படங்களை பார்க்கிறோம். அது இந்த ஃபீனிக்ஸ் படத்திற்கும் நடக்கும் என நம்புகிறேன்" என்றார்.