தமிழ்த் திரைப்படத்துறையின் ஸ்டிரைக்கை மீறி விஜய் சேதுபதியின் ’ஜூங்கா’ படக்குழு, போர்ச்சுக்கல் சென்றுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டார்கள். தியேட்டர் அதிபர்களும் 16 ஆம் தேதி முதல் கேளிக்கை வரியை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தியேட்டர்களை மூடிவிட்டனர்.
தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் உட்பட 4 படங்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
இது ஏன் என்பது பற்றி தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் துரைராஜ் அளித்த விளக்கத்தில், ‘சென்னையில் நடந்த சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால் செட் அமைத்து ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த சில படங்களின் படப்பிடிப்புகளை கூடுதலாக ஓரிரு நாட்கள் நடத்த அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 4 படங்களின் படப்பிடிப்பை தொடர அனுமதி கேட்டு சங்கத்தில் அதன் தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தனர். அதன்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். இதற்கு சில தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தப் படப்பிடிப்பு அனுமதியும் நாளையோடு முடிவடைகிறது.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் கூடி நேற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஸ்டிரைக்கை மீறி விஜய்சேதுபதி நடிக்கும் ’ஜூங்கா’ படக்குழுவினர் நேற்று முன் தினம் இரவு போர்ச்சுக்கல் சென்றுள்ளனர். இதில் விஜய் சேதுபதி, படத்தின் ஹீரோயின் சாயிஷா, இயக்குனர் கோகுல், ஒளிப்பதிவாளர் உட்பட பலர் சென்றுள்ளனர். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.
ஸ்டிரைக் நடக்கும் நேரத்தில் அதை மீறி இவர்கள் இப்படி சென்றது, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து படக்குழுவை சார்ந்தவர்களிடம் பேசினோம். அவர்கள் “இந்த ஸ்டிரைக்கிற்கு முன்னதாகவே நாங்கள் அனுமதி பெற்று வெளிநாடு செல்லத் தீர்மானித்துவிட்டோம். அதற்கான விசா உள்ளிட்ட வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டன. ஆகவே திரை உலகப் போராட்டத்திற்கும் படப்பிடிப்புக்கும் முடிச்சுப் போட்டு பேச வேண்டாம். முற்றிலும் இது தவறான தகவல்” எனக் கூறினர்.