பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ‘ஜுங்கா’இசை வெளியிட்டு விழாவின் போது விஜய் சேதுபதி தெரிவித்தார்.
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, சரண்யா என பலர் கலந்து கொண்டனர்.
விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா.கா.பா ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக்குழுவினரை மேடையில் ஏற்றி, ஜுங்காவில் பணியாற்றிய அனுபவங்களை கேட்டனர். விஜய் சேதுபதி பேசுகையில்,“இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்” என்றார்.
மேலும் “இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம். ‘ஜுங்கா’ என்றால் என்ன? என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது. இந்தப் படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன் லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்தச் சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்” என்றார்.
படத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா? என கேட்டபோது, “எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்தப் படத்தில் காமெடி இருக்கிறது. ஆக்சனும் இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ‘ஜுங்கா’ ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. ‘இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன்’ என்றார். இதை என்னால் மறக்க முடியாது.” என்றார்.
படத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சயீஷா “இப்போதுதான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன். வெளிநாட்டில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல் பலரின் உதவி மறக்க முடியாது”என்றார்.