நடிகர் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.
நயன்தாரா நடித்த அறம், ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ உள்ளிட்டப் படங்களை தயாரித்தவர் கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் ராஜேஷ். இவர் சமீபத்தில் தயாரித்த க/பெ ரணசிங்கம், கடந்த 2 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஸ்காந்த், ரங்கராஜ் பாண்டே,வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜீ ப்ளக்ஸில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து, ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில். “பாஜகவில் சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மாநிலத் தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் கட்சி மற்றும் மாநில, நாட்டு மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.