சினிமா

விஜய் கன்னத்தில் தன் பாணியில் முத்தமிட்ட விஜய் சேதுபதி

விஜய் கன்னத்தில் தன் பாணியில் முத்தமிட்ட விஜய் சேதுபதி

webteam

விஜய்சேதுபதி தனது ஸ்டைலில் விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.


விஜயுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இதற்கான படப்பிடிப்பினை விஜய் நிறைவு செய்துவிட்டார். இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். சில வாரம் முன்பு இப்படம் குறித்து தகவல் ஒன்று வெளியானது. இப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ்குமாரின் பிறந்த தினத்தை ‘மாஸ்டர்’ குழு செட்டில் கொண்டாடிய போது சில சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்தப் பிறந்தநாள் நிகழ்வில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கலை இயக்குனர் சதீஷ்குமாரை தனது வழக்கமான பாணியில் கட்டிப்பிடித்து விஜய் சேதுபதி முத்தமிட்டுள்ளார். அதனை அங்கே இருந்த விஜய் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக விஜய், விளையாட்டாக தனக்கும் ஒரு முத்தம் கேட்டுள்ளார். எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும்படி விஜய் சேதுபதி திடீரென விஜயைக் கட்டிப்பிடித்து, அவரது இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனைக் கண்ட ஒட்டுமொத்த படக்குழுவும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளது. மேலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் சத்தம் போட்டுள்ளனர். ஆனால் இது குறித்த எந்தப் புகைப்படங்களும் வெளியாகவில்லை. ஆனால் தகவல் மட்டும் வெளியானது. எந்த நேரமும் இந்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ், இப்போது முன்பே வெளியான தகவலை உறுதி செய்யும்படி விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஏற்கெனவே கூறப்பட்ட காட்சி பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து ஜெகதீஷ், “அற்புதமாக இருந்த சில மாதங்கள் நிறைவடைந்தன. ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. விஜய்க்கும் விஜய்சேதுபதிக்கும் இதயம் நிறைந்த நன்றி. சிரித்த முகத்துடன் சிரித்த கண்களுடன் ‘மாஸ்டர்’ படத்தை கொண்டாட காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.