விஜய் சேதுபதி Emmy awards
சினிமா

சர்வதேச Emmy Awards மேடையில் விஜய் சேதுபதி! தமிழ் நடிகருக்கு கிடைத்த கௌரவம்! பேசியது என்ன?

இந்த விழாவில் விஜய் சேதுபதி அணிந்திருந்த உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Johnson

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் விஜய் சேதுபதி, தற்போது சர்வதேச அரங்கிலும் கவனம் ஈர்த்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருது (International Emmy Awards) விழாவில் விருது வழங்குபவராக பங்கேற்று, தமிழ் சினிமாவுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த நவம்பர் 23-ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற இந்த விழாவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையினர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த விழாவில் பிரிட்டிஷ் நடிகை ஆண்ட்ரியா ரைஸ்பரோ (Andrea Riseborough) உடன் இணைந்து மேடையேறிய விஜய் சேதுபதி, சிறந்த டிவி திரைப்படம் / குறுந்தொடர் (Best TV Movie/Mini-Series) பிரிவுக்கான விருதை வழங்கினார். இந்தப் பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த Prisoner 951 திரைப்படம் விருதை வென்றது. இதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற எம்மி விருது மேடையில் தமிழ் நடிகராக விஜய் சேதுபதி தனது பங்களிப்பை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது குறித்து பேசிய விஜய் சேதுபதி "விருது விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் (Red Carpet) செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்பது தனது முதல் அனுபவம் என்று தெரிவித்தார். அப்போது, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த சர்வதேச எம்மி விருது விழாவில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. இங்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் நன்றாக இருக்கிறது. இது திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல; எனக்கு ஆச்சரியமாகக் கிடைத்த வாய்ப்பு" என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், தனது திரைப்படமான மகாராஜா ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது குறித்தும், அந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகியை (Matthew McConaughey) சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இந்தப் பயணம் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக மட்டுமே என்பதால் அவரைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

இந்த விழாவில் விஜய் சேதுபதி அணிந்திருந்த உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த பிரத்யேக கருப்பு நிற டக்ஸிடோவை அவர் அணிந்திருந்தார். குறிப்பாக, அந்த உடையில் இடம்பெற்றிருந்த தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகள் சென்னையின் புகழ்பெற்ற வள்ளுவர் கோட்டத்தின் தேர்வடிவக் கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் சர்வதேச மேடையில் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் இந்த நிகழ்ச்சியில் அவருடன் கலந்துகொண்டார். விழாவில் விருது வழங்கும் தருணங்கள், சிவப்புக் கம்பளப் புகைப்படங்கள் உள்ளிட்ட பல புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, 2012-ம் ஆண்டில் பிரேர்ணா வான்வரியும், ஆஷ்கா கோராடியாவும், சிமோன் சிங்கும் சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கியுள்ளனர். ஆனால் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இந்த உலகளாவிய மேடையில் விஜய் சேதுபதி பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் தொடங்கி இந்திய சினிமா வரை தனது நடிப்பால் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி, தற்போது சர்வதேச எம்மி மேடையிலும் தமிழர்களின் அடையாளத்தை எடுத்துச் சென்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.